பாகம் -8 - கடவுள் இரக்கமுள்ளவர், இருந்தும் பலர் ஒவ்வொரு நாளும் இழக்கப்படுகிறார்கள்.
கடவுள் இரக்கமுள்ளவராக இருக்கிறாரே என்று பாவி சொல்கிறான். நான் அவனுக்குப் பதில் சொல்கிறேன்: அதை யார் மறுக்கிறார்கள்? உண்மைதான். கடவுளின் இரக்கம் அளவற்றதுதான். ஆயினும் ஒவ்வொரு நாளும் பலர் இழக்கப்படுகிறார்களே! "(மனஸ்தாபத்தால்) நொறுங்கிய இருதயமுள்ளவர்களைக் குணமாக்க அவர் என்னை அனுப்பினார்" (இசை.61:1), நல்ல மனமுள்ளவர்களைக் கடவுள் குணப்படுத்துகிறார். அவர் பாவத்தை மன்னிக்கிறார்; ஆனால் பாவத்தில் பிடிவாதமாக நிலைத்திருப்பவனை அவர் மன்னிக்க இயலாது.
"நான் இன்னும் இளைஞன்தான்" என்று பாவி பதில் கூறலாம். உண்மை! நீ இளைஞன்தான்; ஆனால் கடவுள் வருடங்களையல்ல. பாவங்களையே கணக்கிடுகிறார். இது அனைவருக்கும் ஒரே விதமாக இருப்பதில்லை. ஒருவனுக்குக் கடவுள் நூறு பாவங்களையும், மற்றொருவனுக்கு ஆயிரம் பாவங்களையும் மன்னிக்கிறார். இன்னொருவனையோ, அவன் இரண்டாவது பாவம் கட்டிக் கொண்ட உடனேயே நரகத்தில் தள்ளுகிறார். எத்தனை பேரை அவர்களுடைய முதல் பாவத்திலேயே அவர் அங்கே அனுப்பியிருக்கிறார்! ஐந்து வயதுக் குழந்தை ஒன்று ஒரு தேவதூஷணம் கூறியதற்காக, அடுத்த கணம் நரகத்தில் தள்ளப்பட்டதாக அர்ச். கிரகோரியார் கூறுகிறார்!
பன்னிரண்டு வயதுச் சிறுமி ஒருத்தி தனது முதல்பாவத்திற்காக நரகத்திற்குத் தீர்ப்பிடப்பட்டதாக திவ்விய கன்னிகை ஃப்ளாரன்ஸின் பெனடிக்டா என்னும் தேவ பணிப்பெண்ணுக்கு வெளிப்படுத்தினார்கள். எட்டு வயதேயான மற்றொரு சிறுவன் தன முதல் பாவம் செய்தவுடனே இறந்து, தன் ஆன்மாவை இழந்து போனான். அத்திமரத்தில் தாம் கனி எதையும் காணாத முதல் தடவையே நமதாண்டவர் அதைச் சபித்தார் என்றும், அது பட்டுப் போயிற்றென்றும் அர்ச். மத்தேயு சுவிசேஷத்தில் நாம் வாசிக்கிறோம்: "இனி ஒருக்காலும் உன்னிடத்தில் காய் காய்க்காமல் போகட்டும்" (மத். 21:19).
மற்றொரு முறை சர்வேசுரன்: “தமாஸ்குவின் மூன்று பாதகங்களை மன்னிப்போம், நான்காவதிலோ அதை நாம் மனந்திருப்ப மாட்டோம்" என்றார் (ஆமோஸ்.1:3). மித மிஞ்சின நம்பிக்கையுள்ள மனிதன் யாராவது கடவுளிடம் அவர் என் மூன்று பாவங்களை மன்னித்தாலும், நான்காவதை மன்னிக்க மாட்டார் என்று கேட்கலாம். அதில், நாம் கடவுளின் தெய்வீகத் தீர்ப்புகளை ஆராதித்து, அப்போஸ்தலரோடு சேர்ந்து: "ஆ, தெய்வ ஞானம், அறிவு இவைகளின் திரவிய பொக்கிஷம் எவ்வளவோ ஆழமானது! அவருடைய நியாயத் தீர்ப்புகள் எவ்வளவோ புத்திக் கெட்டாதவைகளுமாய், அவருடைய வழிகள் எவ்வளவோ ஆராய்ந் தறியக் கூடாதவைகளுமாயிருக்கின்றன" (உரோ.11:33) என்று சொல்ல வேண்டும். "தாம் யாரை மன்னிக்கிறார் என்றும், யாரை மன்னிப்பதில்லை என்றும் அவர் நன்றாக அறிந்திருக்கிறார்; அவர் யாருக்காவது இரக்கம் காட்டுகிறார் என்றால், அதை அவர் இலவசமாகவே தருகிறார்; அவர் அதை மறுக்கும்போதோ, நீதியுடன் அதைத் தர மறுக்கிறார்" என்று அர்ச். அகுஸ்தினார் கூறுகிறார்.
பிடிவாதமுள்ள பாவி, “ஆனால் நான் மிக அடிக்கடி கடவுளை நோகச் செய்திருக்கிறேன். அவரும் என்னை மன்னித்திருக்கிறாரே: ஆகவே, இந்த இன்னொரு பாவத்தையும் அவர் மன்னிப்பார் என்று நான் நம்புகிறேன்" என்று பதில் சொல்வான். ஆனால் நான் சொல்கிறேன்: கடவுள் இதுவரை உன்னைத் தண்டிக்கவில்லை என்பதால், இனியும் அது அப்படித்தான் இருக்குமா? (பாவத்தின்) அளவு நிரம்பி விடும், அப்போது தண்டனை வரும்.
சம்சோன் தாலிலாவோடு தன் அசுத்த நடத்தையைத் தொடர்ந்து கொண்டே. முன்பு போல பிலிஸ்தியர்களின் கரங்களிலிருந்து தான் தப்பி விட முடியும் என்று நம்பினான்: "முன்பு போல் என் சங்கிலிகளை உடைத்து நான் புறப்பட்டுப் போவேன்" (நியா.16:20). ஆனால் அந்தக் கடைசி முறை அவன் பிடிபட்டான். இறுதியில் தன் உயிரையும் இழந்தான். "பாவம் செய்தேன். அதனால் எனக்கு என்ன தீங்கு வந்தது? என்று சொல்லாதே. "நான் மிக அநேகப் பாவங்களைக் கட்டிக் கொண்டேன், கடவுள் என்னை ஒருபோதும் தண்டிக்க வில்லை என்று சொல்லாதே" என்கிறார் ஆண்டவர்: "ஏனெனில் உன்னதக் கடவுள் பொறுமையாயிருந்தபின் தண்டிப்பார்" (சீராக்)5:4). அதாவது, காலம் வரும், அப்போது அவர் அனைத்திற்கும் சன்மானமோ, தண்டனையோ தருவார். அவரது இரக்கம் எவ்வளவு பெரிதாயிருந்ததோ, அந்த அளவுக்கு தண்டனையும் பெரிதாயிருக்கும்.
மனஸ்தாப ஜெபம்
நான் சோதிக்கப்படும்போது, ஓ இரக்கமுள்ள தேவனே, நான் எப்போதும் உடனே ஓடி வந்து உம்மிடம் தஞ்சம் புகுவேன். இதுவரை என் வாக்குறுதிகளிலும், என் தீர்மானங்களிலும் நான் நம்பிக்கை வைத்திருந்தேன், என் சோதனைகளில் உம்மிடம் என்னை ஒப்புவிப்பதில் நான் அசட்டையாயிருந்தேன். இதுவே என் அழிவாக இருந்து வந்திருக்கிறது. இல்லை; இந்நாள் முதல் நீரே என் நம்பிக்கையாகவும் பலமாகவும் இருப்பீர். இவ்வாறு எல்லாவற்றையும் செய்து முடிக்க வல்லவனாக நான் இருப்பேன்.
ஆகையால், ஓ என் சேசுவே, எப்போதும் உம்மிடம் என்னைக் கையளித்து, என் எல்லாத் தேவைகளிலும் உமது உதவியை மன்றாடும்படியாக, உமது பேறுபலன்களின் வழியாக, எனக்கு அருள் தாரும். ஓ என் இராஜரீக நன்மைத்தனமே. நேசிக்கப்படத் தக்க அனைத்திற்கும் மேலாக நேசிக்கப்படத் தக்கவரே, நம்மை நான் நேசிக்கிறேன், உம்மை மாத்திரமே நான் நேசிப்பேன் ஆயினும் நீர் எனக்கு உதவி செய்ய வேண்டும்.
ஓ மரியாயே, என் மாதாவே. நீரும் உமது மன்றாட்டால் எனக்கு உதவி செய்ய வேண்டும்; உமது பாதுகாவலின் மேற்போர்வைக்குள் என்னை மறைத்து வைத்துக் கொளளும், நான் சோதிக்கப்படும்போதெல்லாம் உம்மைக் கூவியழைக்க எனக்கு வரமருளும்; உமது திருப்பெயர் எனக்குக் காவல் அரணாயிருக்கும்.
நீதியின் சூரியனே அர்ச் சூசையப்பரே எங்களுக்காக உமது திருக் குமாரனை வேண்டிக் கொள்ளும்
ஆமென்