Saturday, July 5, 2025

அர்ச் சிலுவை அருளப்பரின் தியானம் - நமது ஆத்தும இரட்சண்ய வாழ்வு எப்படி இருக்க வேண்டும் ? பாகம் -2


நமது ஆத்தும இரட்சண்ய வாழ்வு எப்படி இருக்க வேண்டும் ?
பாகம் -2


என் தெய்வீக அரசரே, என் அன்பிற்குரிய மீட்பரே, வாரும். இந்நாள் முதல் நீர் மட்டுமே என் ஆன்மாவில் அரசாள்வீராக; நீர் சித்தங்கொள்வதைத் தவிர வேறு எதையும் நான் ஆசிக்காமலும், விரும்பாமலும் இருக்கும்படியாக, என் சித்தத்தை முழுவதும் உமக்குச் சொந்தமாக்கிக் கொள்ளும். எனக்கு நேரிடும் எக்காரியத்திலும், "என் தேவனே, நீர் சித்தங் கொள்வதையே நானும் சித்தங்கொள்கிறேன். உமது சித்தம் என்னில் எப்போதும் செய்யப்படுவதாக" என்றே நான் எப்போதும் சொல்வேன்! உம்முடைய சித்தம் செய்யப் படுவதாக!

நம் நன்மையைத் தவிர வேறு எதை ஆண்டவர் சித்தங் கொள்கிறார்? "நீங்கள் அர்ச்சியசிஷ்டவர்களாக வேண்டுமென்பதே சர்வேசுரனுடைய சித்தம்" (1தெச.4:3). இவ்வாழ்வில் திருப்தியோடும், மறு வாழ்வில் மகிழ்ச்சியோடும் இருப்பதன் மூலம் நாம் புனிதர்களாக இருப்பதைக் காணவே அவர் விரும்புகிறார். கடவுளிடமிருந்து நமக்கு வரும் எல்லாச் சிலுவைகளும் நமக்கு "நன்மைக்கு ஏதுவாக உதவுகின்றன" (உரோ.8:28) என்பதை நாம் புரிந்து கொள்வோமாக.

 இவ்வாழ்வில் நமக்கு வரும் தண்டனை களும் கூட நம் அழிவுக்காக அல்ல, மாறாக, நாம் நம்மைத் திருத்திக் கொண்டு, நித்தியப் பேரின்பத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே நமக்கு அனுப்பப்படுகின்றன: "தேவன்... நம்மைத் தண்டிக்கிற தண்டனைகள் நம்மை அழிப்பதற்கல்ல, நம்மைச் சீர்ப்படுத்துவதற்கே நேரிட்டிருக்கின்றன என்று எண்ணிக்கொள்ளக் கடவோம்" (யூதித்.8:27). 

கடவுள் எவ்வளவாக நம்மை நேசிக்கிறார் என்றால், நம்மில் ஒவ்வொருவருடைய இரட்சணியத்தையும் அவர் விரும்புவது மட்டுமல்ல, மாறாக அதை அவர் ஏக்கத்தோடு ஆசித்துத் தேடுகிறார். "ஆண்டவர் என்மேல் கருத்தாயிருக் கிறார்" (சங். 39:16). "தமது சொந்தக் குமாரன் மேல் முதலாய் இரக்க மில்லாமல், நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர் மற்றெல்லாவற்றையும் அவரோடு நமக்குத் தானம் பண்ணாதிருப்ப தெப்படி?" (உரோ.8:32). 

ஆகவே, நாம் இவ்வாழ்வில் இருக்கையில், நம் நன்மையை மட்டுமே எப்போதும் ஆசிக்கிறவராகிய சர்வேசுரனின் திருக்கரங்களில் நம்மை எப்போதும் கையளித்து விடுவோமாக. "அவர் உங்களை விசாரிக்கிறவராகையால், அவர் மேல் உங்கள் சகல கவலைகளையும் வைத்துவிடுங்கள்" (1 இரா.5:7). நமதாண்டவர் அர்ச். சியென்னா கத்தரீனம்மாளிடம்: "என்னை நினைத்துக் கொள்; நான் எப்போதும் உன்னை நினைத்துக் கொள்வேன்" என்றார். புனித மணவாளியோடு சேர்ந்து, "நான் என் நேசருடையவள், என் நேசர் என்னுடையவர்" (உந்.சங்.6:2) என்று சொல்வோம். என் நேசர் எனக்கு எது நல்லது என்று சிந்திக்கிறார்

அவரைப் பிரியப்படுத்துவது பற்றியும், அவருடைய திருச்சித்தத்தோடு என்னையே இணைத்துக் கொள்வது பற்றியும் மட்டுமே நான் சிந்திப்பேன். மேலும் மடாதிபதி நீலஸ் கூறுவது போல, நாம் விரும்புவதைக் கடவுள் செய்ய வேண்டுமென்று ஒருபோதும் நாம் ஜெபிக்கக் கூடாது. மாறாக, அவர் சித்தங் கொள்வதையே நாம் செய்ய அருளும்படியே நாம் ஜெபிக்க வேண்டும்.

இதை எப்போதும் செய்கிறவன் மகிழ்ச்சியாக வாழ்வான், பாக்கியமான மரணத்தை அடைவான்; தேவ சித்தத்திற்குத் தன்னை முழுவதும் அர்ப்பணித்தவனாய் மரிக்கிறவன், தனது இரட்சணியத்தைப் பற்றிய தார்மீக உறுதியுடன் புறப்பட்டுச் செல்கிறான்.

தியானச் சிந்தனை 

ஓ சேசுவே, என் மீட்பரே, நீரே என் இரட்சணியத்தின் காரணராக இருக்கும்படியாக, கடும் அவஸ்தையில் சிலுவையின் மீது உமது உயிரைக் கையளித்தீர்; ஆகவே என் மீது இரக்கமாயிருந்து என்னை இரட்சித்துக் கொள்ளும்; இத்தகைய சுடும் வாதையிலும், இத்தகைய பேரன்போடும் நீர் மீட்டு இரட்சித்த ஓர் ஆன்மா நரகத்தில் என்றென்றும் உம்மை வெறுத்துப் பகைக்க அதை அனுமதியாதிரும். 

உம்மை நான் நேசிக்கச் செய்வதற்கு, இது வரை நீர் செய்துள்ளதற்கு மேலாய் உம்மால் எதுவும் செய்ய முடியாது. கல்வாரியில் தேவரீர் மரிக்கும்போது, "எல்லாம் முடிந்தது" (அரு.19:30) என்ற நேச வார்த்தைகளை நீர் உச்சரித்தபோது, இதை நான் புரிந்துகொள்ளச் செய்தீர். ஆனால் உமது அன்பை நான் எப்படி ஏற்றுக் கொண்டிருக்கிறேன்? கடந்த காலத்தில் உம்மைத் துன்புறுத்தியதையும், என்னை வெறுக்கும்படி உம்மைத் தூண்டியதையும் தவிர நான் வேறொன்றும் செய்யவில்லை என்று உண்மையாகவே நான் சொல்லக்கூடும். இவ்வளவு அதிகப் பொறுமையுடன் என்னைப் பொறுத்துக் கொண்டதற்காகவும், இப்போது என் நன்றியற்றதனத்திற்குப் பரிகாரம் செய்யவும். நான் இறப்பதற்கு முன் உம்மை நேசிக்கவும் எனக்குக் காலம் கொடுத்திருப்பதற்காகவும் நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். 

என் சித்தத்தையும், என் சுதந்திரத்தையும், என்னிடமுள்ள அனைத்தையும் நான் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். இந்தக் கணத்திலிருந்து என் வாழ்வை உமக்குப் பலியாக ஒப்புக்கொடுக்கிறேன், நீர் எனக்கு அனுப்ப இருக்கும் மரணத்தை, அதைச் சேர்ந்த சகல வேதனைகள் மற்றும் சூழ்நிலைகளோடு நான் ஏற்றுக் கொள்கிறேன். இந்த என்னுடைய பலியை, என் சேசுவே, சிலுவையின் மீது நீர் எனக்காக ஒப்புக் கொடுத்த அந்த மாபெரும் பலியோடு ஒன்றிக்கிறேன். உமது திருச் சித்தத்தை நிறைவேற்றும்படி மரிக்க நான் ஆசையாயிருக்கிறேன். உமது திருப்பாடுகளின் பேறுபலன்களைப் பார்த்து, உமது தேவ பராமரிப்புக்கு என்னை அர்ப்பணித்து எப்போதும் வாழும். வரத்தை எனக்குத் தந்தருளும்படி உம்மை மன்றாடுகிறேன்; மரணம் வரும்போது, உமது நல்ல விருப்பப்படி அதே அமைந்த மனதுடன் நான் அதைத் தழுவிக் கொள்ள வரமருளும். என் சேசுவே, உம்மை மகிழ்விக்கும்படி மரணமடைய நான் விரும்புகிறேன். "உமது சித்தம் செய்யப்படுவதாக" என்று கூறியபடி சாக நான் ஆசிக்கிறேன். நீர் இவ்வாறுதான் மரித்தீர். 

பரிசுத்த மரியாயே, என் மாதாவே. நானும் அப்படியே இறக்கும் வரத்தை எனக்குப் பெற்றுத்தாரும்.

அர்ச் சூசையப்பரே உம்மைப் நாங்களும் நன்மரணம் மரிக்க உம் திருக் குமாரனிடம் மன்றாடும் 


ஆமென் 


No comments:

Post a Comment