Saturday, July 5, 2025

அர்ச் சிலுவை அருளப்பரின் தியானம் நமது ஆத்தும இரட்சண்ய வாழ்வு எப்படி இருக்க வேண்டும் ? பாகம் -4

 அர்ச் சிலுவை அருளப்பரின் தியானம் 
நமது ஆத்தும இரட்சண்ய வாழ்வு எப்படி இருக்க வேண்டும் ?
பாகம் -4


சர்வேசுரனுடைய மகா மேன்மையையும், மகத்துவத்தையும் தியானித்து, தாவீதரசர்: "ஆண்டவரே, உமக்கு நிகரானவர் யார்?" என்று கூக்குரலிட்டார்! ஆனால் சர்வேசுரனோ, பாவிகள் தமது நட்பை வெறுத்துத் தள்ளி, அதற்குப் பதிலாக ஒரு பரிதாபமான, அற்ப உலக சுகத்தைத் தேர்ந்து கொள்வதைக் கண்டு, "என்னை யாருக்கு ஒப்பாக்கினீர்கள். அல்லது என்னை யாருக்கு சமமாக்கினீர்கள்!" என்று கேட்கிறார். பாவியானவன் கடவுளின் நட்பை விடத் தன் ஆசாபாசமும், தனது வீண்பெருமையும். தனது உலக இன்பமும் தனக்கு அதிக மதிப்புள்ளவை என்று அறிக்கை யிடுகிறான். "அவர்கள் ஒரு கைப்பிடி வாற்கோதுமைக்காகவும், ஒரு துண்டு உரொட்டிக்காகவுமே. நம் மக்களினத்தின் நடுவே, நமக்கெதிராகப் பாவம் செய்தார்கள்" (எசேக்.13:19),

பாவி கடவுளை நிந்தித்து வெறுக்கிறான். "திருச்சட்டத்தை மீறியதால் கடவுளுக்கு அவசங்கை செய்தாய்" (உரோ.2:23). ஆம்; ஏனெனில் பாவி கடவுளின் வரப்பிரசாதத்தைப் புறக்கணிக்கிறான்.

ஓர் அவலமான இன்பத்திற்காக, அவரது நட்பைக் காலில் போட்டு மிதிக்கிறான். ஒரு மனிதன் ஒரு இராச்சியத்தை, அல்லது உலகம் முழுவதையுமே தனதாக்கிக் கொள்ளும்படி கடவுளின் நட்பை இழப்பான் என்றால், அவரது நட்பு உலகத்தை விட ஓராயிரம் உலகங்களை விட அதிக மதிப்புள்ளது என்பதால், அப்போதும் கூட அவன் ஒரு மிகப் பெரிய தவறு செய்பவனாகவே இருப்பான். ஆனால் நாம் எதன் நிமித்தமாகக் கடவுளை நோகச் செய்கிறோம்? "தீயவர்கள் எதற்காகக் கடவுளை நோகச் செய்தார்கள்?" (சங்.9:13). கொஞ்சம் மண்ணுக்காக, ஒரு கோபவெறிக்காக, ஓர் அசுத்த இன்பத்திற்காக, கொதித்து, ஆவியாகி மறைகிற ஒன்றுக்காக, ஓர் அற்பப் பிரியத்துக்காக: "அவர்கள் ஒரு கைப்பிடி வாற்கோதுமைக் காகவும், ஒரு உரொட்டித் துண்டுக்காகவும் என்னை மீறினார்கள்." 

பாவத்திற்கு சம்மதிப்பதா, வேண்டாமா என்னும் குழப்பத்தில் பாவி தன் கரங்களில் தராசை எடுத்து, எது அதிக எடையுள்ளது - கடவுளின் வரப்பிரசாதமா. அல்லது அந்தக் கோபவெறியா. அல்லது அந்தத் திரவ ஆவியா, அந்த இன்பமா என்று எடைபோட்டுப் பார்க்கிறான். பிறகு, பாவத்திற்குச் சம்மதிக்கும்போது, தன்னைப் பொறுத்த வரை, தன் ஆசாபாசமும், தன் இன்பமும் கடவுளின் நட்பை விடத் தனக்கு அதிக மதிப்புள்ளது என்று அவன் அறிக்கையிடுகிறான். 

இதோ கடவுள் பாவியால் அவசங்கை செய்யப்படுகிறார்! சர்வேசுரனுடைய மகா மேன்மையையும், மகத்துவத்தையும் தியானித்து, தாவீதரசர்: "ஆண்டவரே, உமக்கு நிகரானவர் யார்?” என்று கூக்குரலிட்டார்! ஆனால் சர்வேசுரனோ, பாவிகள் தமது நட்பை வெறுத்துத் தள்ளி. அதற்குப் பதிலாக ஒரு பரிதாபமான, அற்ப உலக சுகத்தைத் தேர்ந்து கொள்வதைக் கண்டு, "என்னை யாருக்கு ஒப்பாக்கினீர்கள், அல்லது என்னை யாருக்கு சமமாக்கினீர்கள்!" (இசை.40:25) என்று கேட்கிறார். ஆகவே, உனக்கு என் வரப்பிரசாதத்தை விட, அந்த அசுத்த இன்பம் அதிக மதிப்புள்ளதாக இருந்திருக்கிறது என்கிறார் ஆண்டவர்: "நீ உன் முதுகுக்குப் பின்னால் என்னைத் தள்ளி விட்டாய்" (எசேக். 23:35). அந்தப் பாவத்தால் நீ ஒரு கையையோ, அல்லது பத்து இலட்சம் ரூபாயையோ, அல்லது அதற்கும் மிகக் குறைவான ஒரு தொகையையோ இழக்க வேண்டி வரும் என்றால், அந்தப் பாவத்தை நீ செய்யாமல் இருந்திருப்பாய். ஆகவே கடவுள் உன் கண்களில் எவ்வளவு இழிந்தவராகத் தோன்றுகிறார் என்றால், ஒரு கண நேர ஆசாபாசத்திற்காக, அல்லது ஒரு பரிதாபமான, மிக அற்பமான இன்பத்திற்காக உன்னால் நிந்தித்துத் தள்ளப்பட வேண்டியவராக அவர் கருதப்படுகிறார் என்று ஸால்வியன் என்பவர் கூறுகிறார்: "மற்ற எல்லாக் காரியங்களோடும் ஒப்பிடும்போது. கடவுள் மட்டுமே உன்னால் வெறுக்கத் தக்கவராக மதிக்கப் படுகிறார்."


தியானச் சிந்தனை 

ஆகவே, என் தேவனை, நீர் அளவற்ற நன்மைத்தனமாக இருக்கிறீர்; ஆனால் நான் அனுபவித்த அடுத்த கணம் மறைந்து போய்விட்ட ஓர் அற்ப சுகத்துக்காக நான் உம்மைக் கைநெகிழ்ந்தேன். ஆனால் இப்படி என்னால் புறக்கணிக்கப்பட்ட போதிலும், நான் மன்னிப்பை ஆசிக்கிறேன் என்றால், என்னை மன்னிக்க இப்போது நீர் தயாராயிருக்கிறீர். நான் உம்மை நோகச் செய்ததற்காக மனஸ்தாபப்பட்டால், உமது வரப்பிரசாதத்தை மீண்டும் என்னில் ஸ்தாபிப்பதாக நீர் வாக்களிக்கிறீர். ஆம், என் ஆண்டவரே. இவ்வாறு உம்மை அவமானப்படுத்தியதற்காக, என் முழு இருதயத்தோடு நான் மனஸ்தாபப்படுகிறேன். எல்லாத் தீமைகளுக்கும் மேலாக என் பாவத்தை நான் அருவருத்துத் தள்ளுகிறேன்.

பரிசுத்த மரியாயே, நீரே என் நம்பிக்கை என்பதால், என் மீது தயவாயிரும்.

அர்ச் சூசையப்பரே எங்களுக்காக உமது திருக் குமாரனை வேண்டிக் கொள்ளும் 


ஆமென் 


No comments:

Post a Comment