Thursday, December 23, 2021

அர்ச்.பிரான்சிஸ் அசிசியார் தயாரித்த முதல் கிறிஸ்துமஸ் குடில்



அர்ச்.பிரான்சிஸ் அசிசியார் இறப்பதற்கு மூன்று வருடங்களுக்கு முன்பு, திவ்ய குழந்தை சேசுவின் உன்னத பிறப்பின் திருநாளை மகா பக்திபற்றுதலுடன் கொண்டாடுவதற்காக கிரேஷியோ நகர மக்களுக்கு உதவும்பொருட்டு, மிக ஆடம்பரமாக கிறிஸ்துமஸ் திருநாளை கொண்டாட ஏற்பாடு செய்ய முற்பட்டார். தான் கைக்கொள்ளும் இப்புதிய பக்தி முயற்சிக்காக தான் குற்றம் சாட்டப்படாமலிருக்கும்படியாக அதற்கான அங்கிகாரத்தை ரோமுக்கு சென்று பரிசுத்த பாப்பரசரிடம் பெற்று வந்தார். அதன்பிறகு பிரான்சிஸ் ஒரு குடிலை அமைத்தார். வைக்கோலையும் ஒரு எருதையும் ஒரு கழுதையையும் குடில் அமைக்கப்பட்ட இடத்திற்குக் கொண்டுவந்தார். தன் சபையின் துறவற சகோதரர்களையும் அந்நகர மக்களையும் அங்கு வருமாறு அழைத்தார்.

அந்தக் குடில் அமைக்கப்பட்ட காட்டை நோக்கி மக்கள் ஓடி வந்தனர். காடுமுழுவதும் அவர்களுடைய குரலொலிகளால் நிறைந்தது. அந்த வணக்கத்துக்குரிய இரவானது பல பிரகாசமான விளக்குகளால் ஒளிர்விக்கப்பட்டது0 கணீரென்ற குரலொலிகளால் தேவதோத்திர புகழ்ச்சி சங்கீதங்கள் பாடப்பட்டன. சர்வேசுரனுடைய மனிதர் குடிலுக்கு முன்பாக பக்தி பற்றுதலால் முழுவதுமாக ஆட்கொள்ளப்பட்டவராகவும் கண்ணிரால் முழுதும் நனைந்தவராகவும் பரலோக மகிழ்ச்சியால் ஒளிருகின்றவராகவும் நின்று கொண்டிருந்தார்.

அந்த குடிலுக்கு முன்பாக பல திவ்ய பலிபூசைகள் நிறைவேற்றப்பட்டன. கிறிஸ்துவின் லேவியரான பிரான்சிஸ் பரிசுத்த சுவிசேஷத்தைப் பாடினார். ஏழ்மைவேடம் பூண்டு பிறந்த பிரபஞ்சத்தின் அரசரான திவ்ய கர்த்தரின் பிறப்பைப் பற்றி அங்கு கூடியிருந்த மக்கள் அனைவருக்கும் பிரான்சிஸ் பிரசங்கம் நிகழ்த்தினார். 

ஆண்டவருடைய திவ்ய திரு நாமத்தை அவருடைய மிகுந்த கனிந்த தேவசிநேகத்தினால் உச்சரிக்கமுடியாதவராக, பெத்லகேமின் திவ்ய குழந்தை என்றே அழைக்கலானார். கிரேஷியோ நகரின் பிரசத்திபெற்ற மிகுந்த துணிவுள்ள ஒரு வீரர், கிரேஷியோவின் ஜான் எனபவர் அர்ச்சிஷ்டவரால் கவரப்பட்டு பிரான்சிஸின் சபைச் சிடரானவர், அவரால் மிகவும் அதிகமாக நேசிக்கப்பட்டவர்,  அப்போது அங்கிருந்தார். குடிலில் மெய்யாகவே மாட்சிமிகுந்தும் பேரெழிலுடனும் திவ்ய குழந்தை சேசுநாதர்சுவாமி உயிருடன் தூங்கிக் கொண்டிருப்பதையும், திவ்ய குழந்தை சேசுவை தூக்கத்திலிருந்து விழிக்கவைக்கும்படியாக பரிசுத்த தந்தை பிரான்சிஸ், தனது இருகரங்களாலும் அரவணைப்பதையும் இந்த சிடர் காட்சியில் கண்டார். இது மெய்யாகவே நிகழ்ந்த ஒரு நிகழ்வாகும். 

ஏனெனில் இதன் பிறகு அந்த குடிலிலிருந்த வைக்கோலினால் எண்ணற்ற புதுமைகள் நிகழந்தன. அந்நகர மக்கள் அந்த வைக்கோலை பாதுகாத்து வந்தனர். வியாதியுற்றிருந்த கால்நடைகள் அவ்வைக்கோல் தொடப்பட்டதால் புதுமையாக குணமடைந்தன. அந்த வைக்கோல் தொடப்பட்டு அவ்வு+ர் மக்கள் பல கொள்ளை நோய்களிலிருந்து அற்புதமாக காப்பாற்றப்பட்டனர்.

No comments:

Post a Comment