"கெட்டவர்களுக்கு சமாதானமில்லை." 2
கடவுள் பாவிகளைப் புயல்வீசும் சுடலுக்கு ஒப்பிடுகிறார். "துன்மார்க்கரோ, அடங்க அறியாது கொதித்தெழும் கடலைப் போல்... இருக்கிறார்கள்" (இசை.57:20). நான் உன்னிடம் கேட்கிறேன்: யாராவது ஒருவனை நாடக அரங்குக்கு, அல்லது நடன அரங்குக்கு, அல்லது ஒரு விருந்துக்கு அழைத்துச் சென்று, அங்கே அவனைத் தலைகீழாகக் கட்டித் தொங்க விட்டால், அங்கே நடைபெறும் கேளிக்கைகளை அவனால் அனுபவிக்க முடியுமா?
பாவியின் நிலையும் அதுதான். உலக உல்லாசங்களுக்கு நடுவில், ஆனால் கடவுள் இன்றி இருக்கிற அவனது ஆத்துமம் தலைகீழாகத் திருப்பப்பட்டது போல் இருக்கிறது. அவன் உண்ணலாம், குடிக்கலாம். நடனமாடலாம்; ஆடம்பரமான உடைகள் அணிந்து, பிறரால் மதித்துப் போற்றப்படலாம். கௌரவிக்கப்படலாம். அல்லது பெரும் உலக செல்வங்கள் அவனுக்குச் சொந்தமாகலாம். ஆனால் அவன் சமாதானத்தைக் கொண்டிருக்க மாட்டான்: கெட்டவர்களுக்கு சமாதானமில்லை. சமாதானம் கடவுளிடமிருந்து மட்டுமே வருகிறது; கடவுள் தம் எதிரிகளுக்கு அல்ல, தம் நண்பர்களுக்கே அதைக் கொடுக்கிறார்.
இவ்வுலக இன்பங்கள் வறண்டு போகின்றன என்று அர்ச். வின்சென்ட் ஃபெரர் கூறுகிறார்; அவை இருதயத்திற்குள் நுழைவதில்லை: "எங்கே தாகம் இருக்கிறதோ, அங்கே ஊடுருவிச் செல்லாத நீர்த்தாரைகள் அவை." பாவி அழகிய பின்னல் வேலை செய்த விலையேறப்பெற்ற உடைகளை அணியலாம், அல்லது தன் விரலில் அற்புதமான வைர மோதிரம் அணியலாம்: தன் விருப்பப்படி அருமையான அறுசுவை விருந்தாடலாம்; ஆனால் அவனது பரிதாபமான இருதயம் முட்களும். கசப்பும் நிரம்பியதாகவே நிலைத்திருக்கும்;
ஆகவே செல்வங்களும், இன்பங்களும், கேளிக்கைகளும் அவனைச் சூழ்ந்திருந்தாலும், எப்போதும் அமைதியற்றவனாகவும், சிறு பிரச்சினைக்கும் வெறி பிடித்த நாயைப் போல கோப வெறி கொள்பவனாகவுமே நீ அவனைக் காண்பாய். கடவுளை நேசிப்பவனோ, தனக்கு விரோதமான காரியங்கள் நிகழும்போது, தேவ சித்தத்திடம் தன்னைக் கையளித்து, சமாதானத்தைக் கண்டடைகிறான்.
ஆனால் தேவ சித்தத்திற்கு விரோதியாக இருப்பவனால் இதைச் செய்ய முடியாது. ஆகவே தன்னை அமைதிப்படுத்தும் வழியை அவன் அறியாதிருப்பான். அந்த மகிழ்ச்சியற்ற மனிதன் பசாசுக்கு ஊழியம் செய்து, மனவேதனையையும், கசப்பையும் மட்டுமே அந்தக் கொடுங்கோலனிடமிருந்து கூலியாகப் பெறுகிறான்.
ஆ, தேவ வார்த்தை ஒருபோதும் தவற முடியாததாக இருக்கிறது. "உனக்கு அனைத்தும் மிகுதியாகி, மன மகிழ்ச்சியுடனும், இருதயக் களிப் புடனும் நீ இருக்கையில், உன் தேவனாகிய கர்த்தருக்கு நீ ஊழியம் செய்யாமல் போனதால், பசி வேதனைப்பட்டு, தாக வேதனைப்பட்டு, நிர்வாணம் முதலிய சகல குறைவும், வெறுமையும் பட்டு, கர்த்தர் உனக்கு எதிராக அனுப்பும் சத்துருக்களுக்கு ஊழியம் செய்வாய்" (உபா.28:47,48) என்று அது கூறுகிறது. பழிவாங்கத் துடிக்கும் மனிதன், தன்னையே பழிதீர்த்துக் கொள்ளும்போதும், பரிசுத்த கற்பில்லாத மனிதன், தான் இச்சித்துத் தேடியதை அடைந்த பின், பேராசையுள்ளவன் தான் நாடியதைப் பெற்றுக் கொண்டபின், எந்தத் துன்பத்தைத்தான் அனுபவிக்க மாட்டான்!
ஓ எத்தனை பேர்! அவர்கள் தங்களை அழித்துக் கொள்ளும் விதமாக இப்போது அனுபவிக்கும் துன்பங்களைக் கடவுளுக்காக மட்டும் அனுபவித்திருப்பார்கள் என்றால், உண்மையாகவே அவர்கள் பெரும் புனிதர்களாக ஆகியிருப்பார்கள்!
என் சர்வேசுரா, என் சர்வேசுரா, நான் ஏன் உம்மை இழந்து போனேன்; உம்மை விற்று எதை வாங்கிக் கொண்டேன்? நான் செய்துள்ள தீமையை இப்போது நான் அறிந்திருக்கிறேன்; இப்போது உமது அன்பை இழப்பதைக் காட்டிலும், அனைத்தையும், உயிரையும் கூட இழக்கவும் நான் தீர்மானம் செய்திருக்கிறேன்.
மனஸ்தாப ஜெபம்
நித்திய பிதாவே, சேசுகிறீஸ்துநாதரின் அன்பிற்காக, எனக்கு ஒளி தாரும்; நீர் எவ்வளவு மேலான நன்மைத்தனமாயிருக்கிறீர் என்றும், உமது வரப்பிரசாதத்தை நான் இழக்கும்படியாக, பசாசு எனக்குத் தரும் இன்பங்கள் எவ்வளவு அருவருப்புக்குரியவை என்றும் நான் அறிந்து கொள்ளச் செய்தருளும்; நான் உம்மை நேசிக்கிறேன்: ஆயினும் இன்னும் அதிகமாக உம்மை நேசிக்க நான் விரும்புகிறேன். நீரே என் ஒரே சிந்தனையும், ஒரே ஆசையும், ஒரே நேசமுமாக இருக்க எனக்கு வரமருளும். உமது திருக்குமாரனின் பேறுபலன்களின் வழியாக உமது நன்மைத்தனத்திலிருந்து நான் எல்லாவற்றையும் பெற்றுக்கொள்வேன் என்று நம்பியிருக்கிறேன்.
மரியாயே, என் மாதாவே, சேசுகிறீஸ்துநாதரின் மீது உமக்குள்ள அன்பைக் குறித்து, மரணம் வரையில் அவருக்கு ஊழியம் செய்யவும் அவரை நேசிக்கவும் எனக்கு வேண்டிய ஒளியையும், பலத்தையும் பெற்றுத் தர உம்மை மன்றாடுகிறேன்.
நீதியின் சூரியனே அர்ச் சூசையப்பரே எங்களுக்காக உமது திருக் குமாரனை வேண்டிக் கொள்ளும்
ஆமென்
No comments:
Post a Comment