அர்ச் சிலுவை அருளப்பரின் தியானம்
நமது ஆத்தும இரட்சண்ய வாழ்வு எப்படி இருக்க வேண்டும் ?
பாகம் -1
ஏதாவது ஒரு சிலுவையை அனுபவித்துத் துன்புறுவதையும், அதை அரவணைத்துக் கொள்வதன் மூலம் கடவுளைப் பிரியப் படுத்துகிறோம் என்று அறிவதையும் விடப் பெரிய மகிழ்ச்சி வேறு என்ன இருக்க முடியும்? கடவுளின் திருச்சித்தபபடி தனக்கு வந்த எந்தத் துன்பத்திலும் அர்ச். பாஸ்ஸி மரிய மதலேனம்மாள் எத்தகைய ஆறுதலை உணர்ந்தாள் என்றால், தேவசிநேகத்தின் பரவச நிலை ஒன்றில் ஆழ்ந்து விடுவது அவளுக்கு வழக்கமாக இருந்தது.
கடவுளின் சித்தத்தோடு இணைந்திருப்பவன், இவ்வுலகிலும் கூட. ஓர் இடைவிடாத சமாதானத்தை அனுபவித்து மகிழ்கிறான்: "நீதிமானுக்கு என்ன நேரிட்டாலும், அது அவனைக் கஸ்திப்படுத்தாது" (பழ.12:21); இது அப்படித்தான் இருக்க வேண்டும். ஏனெனில் ஓர் ஆன்மா தனது ஒவ்வொரு விருப்பமும் நிறைவேறுவதைக் காண்பதை விட அதிக உத்தமமான மனநிறைவைக் கொண்டிருக்கவே முடியாது; கடவுள் சித்தங் கொள்வதைத் தவிர வேறு எதையும் விரும்பாதிருப்பவன், தான் விரும்பும் அனைத்தையும் பெற்றுக் கொள்கிறான், ஏனெனில் எது நிகழ்ந்தாலும், அது கடவுளின் சித்தத்தாலேயே நிகழ்வதாக இருக்கிறது.
அமைந்த மனதுள்ள ஆன்மாக்கள் ஓர் அவமானத்தைப் பெறும்போது. அதை அவர்கள் விரும்பி ஏற்றுக்கொள்கிறார்கள்.
அவர்கள் வறுமையால் துன்புறும்போது, தாங்கள் ஏழைகளாயிருக்க விரும்புகிறார்கள்; சுருங்கச் சொன்னால், நிகழ்வது எதுவாயினும் அதை அவர்கள் விரும்புகிறார்கள், ஆகவே அவர்கள் மகிழ்ச்சியான வாழ்வு நடத்துகிறார்கள். காலநிலை குளிராக அலலது வெப்பமாக இருந்தாலும், மழை அல்லது புயல் வந்தாலும், கடவுளின் சித்தத்தோடு இணைந்திருப்பவன், "நான் இந்தக் குளிரை அல்லது வெப்பத்தை (இதுபோன்ற எதையும்) விரும்புகிறேன், ஏனெனில் கடவுள் இதை சித்தங்கொள்கிறார்" என்று சொல்கிறான்.
நட்டமோ. கலாபனையோ, நோயோ, மரணமோ வந்தால், அவன் அப்போதும், "நான் ஏழையாக, துன்புறுத்தப்படுபவனாக, நோயாளியாக, அல்லது மரிக்கிறவனாகக் கூட இருக்க விரும்புகிறேன், ஏனெனில் இதுவே கடவுளின் சித்தமாக இருக்கிறது" என்கிறான். தேவ சித்தத்தில் தங்கி யிருப்பவனும், கடவுள் எதைச் செய்தாலும் அதைப் பற்றி இன்பம் காண்பவனுமாகிய மனிதன் மேகங்களுக்கு மேலாக வைக்கப்பட்டு, கீழே கடும்புயல்கள் சுழன்றடிப்பதைக் கண்டாலும், அவற்றால் காயப்படுத்தப்படாமலும், கலக்கமடையாமலும் இருக்கும் மனிதனைப் போல் இருக்கிறான்.
புத்தியெல்லாம் கடந்தது (பிலிப்.4:7) என்று அப்போஸ்தலர் கூறும் சமாதானம் இதுவே. இந்த சமாதானம் உலக இன்பங்கள் அனைத்திற்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறது, எந்த மாற்றத்தையும் அனுமதிக்காத அளவுக்கு இது நிலையான உறுதி கொண்டதாக இருக்கிறது. "பரிசுத்தனான மனிதன் சூரியனைப் போல் மாறாமல் ஞானத்தில் நிலைக் கிறான். மூடனோ சந்திரனைப் போல் மாறுபடுகிறான்" (சர்வப்.27:12). மூடன், அதாவது பாவி சந்திரனைப் போல மாறுகிறான், அது இன்று வளர்கிறது, நாளை தேய்கிறது; ஒரு நாள் அவன் சிரிக்கிறான், மறு நாள் அழுகிறான்; ஒரு சமயம் அவன் மென்மையாகவும், கலகலப்பாகவும் இருக்கிறான். மற்றொரு சமயம் வன்மையாகவும், வருத்தமுள்ளவனாகவும் ஆகிறான்; ஏனெனில் தனக்கு நேரிடும் இன்ப, துன்பங்களுக்கு ஏற்றபடி அவன் மாறுகிறான்.
ஆனால் நீதிமானோ சூரியனைப் போலத் தனது மன அமைதியில், என்ன நிகழ்ந்தாலும் மாறாமலும், ஒரே சீராகவும் இருக்கிறான்; ஏனெனில் தேவ சித்தத்திற்கு ஒத்திருப்பதில் அவனது சமாதானம் தங்கியிருக்கிறது. "பூலோகத்திலே நல்ல மனதுள்ள மனிதர்களுக்கு சமாதானம் உண்டாகக் கடவது" (லூக்.2:14). ஒரு தீமையை அல்லது துன்பத்தை நாம் எதிர்கொள்ளும்போது, நம் ஆன்மாக்களின் கீழான பகுதியில் ஒரு கொடுக்கின் வேதனையை உணர்வதை நாம் தவிர்க்க முடியாதுதான்; ஆயினும், நம் சித்தம் கடவுளின் சித்தத்தோடு இணைந்திருக்கும்போது, நம் ஆன்மாக்களின் மேலான பாகத்தில் எப்போதும் சமாதானம் அரசாளும்; "உங்கள் சந்தோஷத்தை எந்த மனிதனும் உங்களிட மிருந்து எடுத்து விட மாட்டான்" (அரு.16:22). கடவுள் நியமிப்பது எப்படியும் நிறைவேறியே தீரும் என்ற நிலையில், அவரது திருச்சித்தத்தை எதிர்த்து நிற்பவர்கள் எவ்வளவு மூடத் தனமுள்ளவர்களாக இருக்கிறார்கள்! "அவரது திருச்சித்தத்தை எதிர்ப்பவன் யார்?" (உரோ.9:19). ஆகவே இந்தப் பரிதாபத் திற்குரிய சிருஷ்டிகள் சிலுவையைச் சுமக்க வேண்டியவர்கள் ஆகிறார்கள் ஆயினும் எந்த பலனுமின்றியும், சமாதான மின்றியும் அதைச் சுமக்கிறார்கள்: "அவருக்கு விரோதமாய் நிற்கிறவன் ஒருக்காலம் அமரிக்கையாய் வாழமாட்டான்" (. 9:4).
ஆமென்
No comments:
Post a Comment