Monday, July 7, 2025

அர்ச் சிலுவை அருளப்பரின் தியானம் நமது ஆத்தும இரட்சண்ய வாழ்வு எப்படி இருக்க வேண்டும் ? பாகம் -6

  

பாகம் -6 -  "கெட்டவர்களுக்கு சமாதானமில்லை."

 

சமாதானம்! என்ன சமாதானம்? இல்லை என்கிறார் சர்வேசுரன். "கெட்டவர்களுக்கு சமாதானமில்லை" (இசை.48:22). ஒருவனுக்கு வலிமை மிக்க எதிரி ஒருவன் இருக்கிறான் என்றால், அவனால் சமாதானமாய் உண்ணவோ, உறங்கவோ முடியாது; கடவுளையே தன் எதிரியாகக் கொண்டிருப்பவன் சமாதானத்தில் இளைப்பாற முடியுமா?!

இருதயத்தைத் திருப்திப்படுத்த இயலாத இவ்வுலக இன்பங்களும், செல்வங்களும் வீண் என்று மட்டும் சாலமோன் சொல்லாமல், அவை ஆத்துமத்தை சஞ்சலப்படுத்தும் வேதனைகள் என்றும் கூறுகிறார். “எல்லாம் விழலும், ஆத்துமத்திற்கு சஞ்சலமுமாயிருக்கின்றன" (சங்கப். 1:14). பரிதாபத்திற்குரிய பாவிகள்! தங்கள் பாவங்களில் இன்பம் காணலாம் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். ஆனால் கசப்பையும், மனவுறுத்தலையும் மட்டுமே அவர்கள் காண்கிறார்கள்: "அவர்கள் வழிகளில் அழிவும் நிர்ப்பாக்கியமும் இருக்கின்றன. சமாதானத்தின் வழியை அவர்கள் அறிந்ததில்லை" (சங்.13:3).

 சமாதானம்! என்ன சமாதானம்! இல்லை என்கிறார் ஆண்டவர்: “கெட்டவர்களுக்கு சமாதானமில்லை" (இசை.48:22). முதலாவதாக, பாவம் தன்னோடு தேவ பழிவாங்குதல் பற்றிய கடும் அச்சத்தைக் கொண்டு வருகிறது. ஒருவனுக்கு வலிமை மிக்க எதிரி ஒருவன் இருக்கிறான் என்றால், அவனால் சமாதானமாய் உண்ணவோ, உறங்கவோ முடியாது; கடவுளையே தன் எதிரியாகக் கொண்டிருப்பவன் சமாதானத்தில் இளைப்பாற முடியுமா? "தீமை செய்பவர்களுக்கு அஞ்சுங்கள்" (பழமொழி.10:29).

 ஒரு நில நடுக்கமோ, இடி முழக்கமோ உண்டானால், பாவத்தில் வாழ்பவன் எப்படி நடுங்காமலிருப்பான்! அசையும் ஒவ்வொரு இலையும் கூட அவனை எச்சரிக்கிறது: "பேரச்சத்தின் ஓசை எப்போதும் அவன் காதுகளில் இருக்கிறது" (யோபு.28:1). தன்னைத் துரத்துபவனைக் காணாவிடினும், அவன் பறந்தோடுகிறான். "எவனும் துரத்தாமலே தீயவன் பறந்தோடிப் போகிறான்" (பழ.28:1). அவனைத் துரத்துவது யார்? அவனுடைய சொந்தப் பாவமே. காயின் தன் சகோதரனான ஆபேலைக் கொன்றபின்: "ஆகவே, என்னைக் காண்கிற எவனும் என்னைக் கொல்வானே!" என்றான் (ஆதி.4:4). எவனும் அவனைக் காயப்படுத்த மாட்டான் என்று ஆண்டவர் அவனுக்கு உறுதி தந்த போதிலும் -இல்லை, அது அப்படி இருக்காது வேதாகமம் கூறுவது போல, காயின் எப்போதும் ஒடிக்கொண்டேயிருக்கும் ஓர் அகதியாக இருந்தான்: "காயின் பூமியின்மீது பரதேசியாய் சஞ்சரித்தான்" (ஆதி.4:16). காயினைத் துன்பப்படுத்தியது அவனுடைய சொந்தப் பாவங்களே அல்லாமல் வேறு என்ன?

மேலும், பாவம் தன்னோடு மனவுறுத்தலையும்--இடை விடாமல் அரித்துத் தின்னும் அந்தக் கொடூரமான புழுவையும்--கொண்டு வருகிறது. ஈனப் பாவி, நாடகத்திற்கும். நடனங்களுக்கும். விருந்துகளுக்கும் போகிறான். ; அவனது மனசாட்சி அவனிடம்: “நீ கடவுளின் பகைவனாக இருக்கிறாய்; நீ இறக்க நேர்ந்தால், எங்கே செல்வாய்?" என்று கேட்கிறது. மனவுறுத்தல் இவ்வாழ்விலும் கூட எவ்வளவு பெரிய வாதை என்றால், அதிலிருந்து தப்பிப்பதற்காகச் சிலர் தற்கொலை செய்து விடுகிறார்கள். இவர்களில் ஒருவன் அவநம்பிக்கையின் காரணமாக நான்று கொண்ட செத்த யூதாஸ் ஆவான்.

மற்றொருவனைப் பற்றிப் பின்வருமாறு விவரிக்கப் படுகிறது: அவன் ஒரு குழந்தையைக் கொலை செய்தபின், மன உறுத்தலிலிருந்து தப்பிப்பதற்காக ஒரு துறவி ஆனான். ஆனால் துறவறத்திலும் கூட சமாதானத்தைக் கண்டடைய முடியாமல். அவன் ஒரு நீதிபதியிடம் போய், தன் குற்றத்தை அவரிடம் ஒத்துக் கொண்டு, மரண தண்டனைக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டான்.

 

தியானச் சிந்தனை

ஓ வீணாக்கப்பட்டு விட்ட என் வாழ்வே! ஓ என் தேவனே, உம்மை நோகச் செய்தபின் நான் பட்ட வேதனைகளை உம்மை மகிழ்விக்கும் கருத்தோடு நான் அனுபவித்திருந்தேன் என்றால், மோட்சத்திற்காக எவ்வளவு அதிகமான பேறுபலனை இப்போது நான் பெற்றிருப்பேன்!

ஆ, என் ஆண்டவரே, எதற்காக நான் உம்மை விட்டுப் பிரிந்து, உமது வரப்பிரசாதத்தை இழந்து போனேன்? ஒரு குறுகிய கால, விஷமேறிய இன்பங்களுக்காக! அவையோ எனக்குச் சொந்தமான அடுத்த கணமே மாயமாக மறைந்து விட்டன. ஆனதால் என் இருதயத்தை அவை முட்களும், சுசப்பும் நிறைந்ததாக விட்டுச் சென்றன.

ஆ. என் பாவங்களே, நான் ஆயிரம் தடவை உங்களை வெறுத்துச் சபிக்கிறேன். என் சர்வேசுரா, எவ்வளவோ பொறுமையோடு என்னை சகித்துக் கொண்ட உமது இரக்கத்தை நான் வாழ்த்திப் போற்றுகிறேன். என் சிருஷ்டிகரும் மீட்பருமானவரே, எனக்காக உம் உயிரைக் கையளித்தவரே, நான் உம்மை நேசிக்கிறேன்; உம்மை நான் நேசிப்பதால், உம்மை நோகச் செய்ததற்காக என் முழு இருதயத்தோடும் மனஸ்தாபப்படுகிறேன்

 

ஆமென்

No comments:

Post a Comment