அர்ச் சிலுவை அருளப்பரின் தியானம்
நமது ஆத்தும இரட்சண்ய வாழ்வு எப்படி இருக்க வேண்டும் ?
பாகம் -5
ஏதாவது ஓர் இன்பத்தின் நிமித்தம் பாவியானவன் கடவுளை நோகச் செய்யும்போது. அந்த இன்பமே அவனது தெய்வமாகிவிடுகிறது. ஏனெனில் அதையே அவன் தனது இறுதி நோக்க மாக்கிக் கொள்கிறான்.
“ஒவ்வொருவனும் ஆசிக்கும் காரியத்தையே அவன் வழிபடுவான் என்றால், அது அவனுக்கு ஒரு தெய்வமாக இருக்கிறது. இருதயத்திலுள்ள ஒரு துர்க்குணம் பீடத்தின் மீதுள்ள விக்கிரகமாக இருக்கிறது" என்று அர்ச். ஜெரோம் கூறுகிறார். "இன்பங்களை நீ நேசிக்கிறாய் என்றால், அந்த இன்பங்கள் உன் தெய்வமாக இருக்கின்றன" என்று அர்ச். தாமஸ் அக்குயினாஸ் கூறுகிறார்.
அர்ச். சிப்ரியன் தம் பங்கிற்கு, "கடவுளுக்குப் பதிலாக மனிதன் வேறு எதைத் தேர்ந்து கொண்டாலும், அவன் அதைத் தனது தெய்வமாக்குகிறான்" என்கிறார். ஜெரோபோவாம் கடவுளுக்கு எதிராகக் கலகம் செய்தபோது, மக்களைத் தன்னோடு விக்கிரக வழிபாட்டிற்குள் இழுத்துக் கொள்ள அவன் முயன்றான். எனவே அவன் தன் விக்கிரகங்களை அவர்களுக்குக் காட்டி, "ஓ இஸ்ராயேலே. இவர்களே உன் தேவர்கள்" என்றான் (3 அரசர்.12:28).
இவ்வாறே பசாசும் பாவிக்கு ஏதாவது ஓர் உலக இன்பத்தைக் காட்டி, “உனக்கும் கடவுளுக்கும் என்ன இருக்கிறது? இந்த இன்பத்தில், இந்த ஆசாபாசத்தில் உன் தெய்வத்தைப் பார்; இதை எடுத்துக் கொள், கடவுளை விட்டுவிடு" என்கிறது. பாவி இதற்கு சம்மதிக்கும்போது, அந்த இன்பத்தை அவன் தன் இருதயத்தில் தெய்வமாக வைத்து ஆராதிக்கிறான்: "இருதயத்தில் உள்ள ஒரு துர்க்குணம், பீடத்தின் மீதுள்ள ஒரு விக்கிரகமாக இருக்கிறது."
பாவியானவன் கடவுளை அவசங்கை செய்கிறான் என்றாலும், குறைந்தபட்சம் அவரது சமூகத்தில் அவன் அப்படிச் செய்யாமல் இருப்பானா? ஆ அவன் அவரது திருமுகத்திற்கு முன்பாகவே அவரை அவமானப்படுத்துகிறான். ஏனெனில் கடவுள் எங்கும் வியாபித்திருக்கிறார். "நாம் பரலோகத்தையும், பூலோகத்தையும் நிரப்புகிறோம்" (எரே.23:24). இதைப் பாவியும் அறிந்திருக்கிறான். இருந்தாலும் கடவுளின் கண்களுக்கு முன்பாகவே அவருக்குக் கோபமூட்ட அவன் தயங்குவதில்லை. "அவர்கள் நமக்குக் கோபமூட்டும் காரியத்தை அவர்கள் நம் கண்களுக்கு முன்பாகவே செய்கிறார்கள்"(இசை. 65:3).
இதோ, என் தேவனே, நான் நம்பியுள்ளது போல, நான் இப்போது உம்மிடம் திரும்பி வருகிறேன்; நீர் ஏற்கெனவே என்னை உம் குழந்தையாக ஏற்று என்னை அரவணைக்கிறீர்.
ஓ அளவற்ற நன்மைத்தனமே, நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஆனால் இப்போது எனக்கு உதவி புரியும். என்னிடமிருந்து உம்மை மீண்டும் தள்ளிவிட ஒருபோதும் அனுமதியாதேயும். நரகம் என்னைச் சோதிப்பதை நிறுத்தாது; ஆனால் நீர் நரகத்தை விட அதிக வல்லமை யுள்ளவராக இருக்கிறீர். நான் எப்போதும் உமக்கு என்னை ஒப்புக் கொடுத்து வருவேன் என்றால், இனி ஒருபோதும் என்னை நான் உம்மிடமிருந்து விலக்கிக் கொள்ள மாட்டேன் என்பதை நான் அறிந்திருக்கிறேன்.
எனவே, நான் என்னை எப்போதும் உமது பாதுகாவலில் வைக்கும்படியாகவும், இப்போது நான் செய்வது போல, "ஆண்டவரே. எனக்கு ஒத்தாசை செய்யும்; எனக்கு ஒளி தாரும், எனக்கு பலம் தாரும், எனக்கு நிலைமை வரம் தாரும், எனக்குப் பரலோகத்தைத் தாரும். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, ஆன்மாக்கனின் உண்மையான பரலோகமாக இருக்கிற உமது தேவசிநேகத்தை எனக்குத் தந்தருளும்" என்று எப்போதும் உம்மிடம் நான் ஜெபிக்கும்படியாகவும், நீர் எனக்குத் தந்தருள வேண்டிய வரம் இதுவே.
ஓ அளவற்ற நன்மைத்தனமே, நான் உம்மை நேசிக்கிறேன். எப்போதும் உம்மை நேசிக்க ஆசையாயிருக்கிறேன். சேசுக்கிறீஸ்துநாதரின் அன்பிற்காக, என் மன்றாட்டைக் கேட்டருளும். மரியாயே, நீர் பாவிகளின் அடைக்கலமாக இருக்கிறீர்; உம் சர்வேசுரனை நேசிக்க ஆசிக்கும் பாவியாகிய எனக்கு உதவி செய்தருளும்.
பரிசுத்த மரியாயே, நீரே என் நம்பிக்கை என்பதால், என் மீது தயவாயிரும்.
அர்ச் சூசையப்பரே எங்களுக்காக உமது திருக் குமாரனை வேண்டிக் கொள்ளும்
ஆமென்
No comments:
Post a Comment