உலகிற்கும், மனுக்குலத்திற்கும் அடுத்து வரும் தீமைகளையும், அதனால் வரும் தேவ நீதியின் தண்டனைகளையும் வேதாகமங்களில் காண்கிறோம். பழைய ஏற்பாட்டில் இசையாஸ் தீர்க்கத்தரிசியிலிருந்து, புதிய ஏற்பாட்டில் அர்ச். இராயப்பர், சின்னப்பர் ஆகிய அப்போஸ்தலர்களால் வெளிப்படுத்தப்பட்ட தீர்க்கத்தரிசனங்களையும், எச்சரிப்புகளையும் காணலாம். (காண்க: ஐதைPமோத்தேயு 4-3,42 ஐதைPமோ. 3-1-62 இராய. 3-3 போன்றவை) அதே போன்று திருச்சபையின் வரலாற்றில் அவ்வப்போது அடுத்து வரும் கேடுகளை பரிசுத்த ஆன்மாக்கள் மூலமாக நமது மீட்பரும், தேவமாதாவும் முன்னறிவித்து எச்சரித்து வருவதை அறிவோம். அவற்றுள் மிகவும் கடுமையானதும், திகைக்க வைப்பதுமானவை 16-ம் நுரற்றாண்டைச் சேர்ந்த வண. மரியன்னா தாயாருக்கு நமதாண்டவரும், மாதாவும் வெளிப்படுத்திய தீர்க்கத்தரிசனங்களாகும். நாம் வாழும் இக்காலத்தில் உலகிலும், சத்திய திருச்சபையிலும் நிகழ்ந்து வரும் கடவுள் மறுப்பு, தேவ அவசங்கைகள், நவீனத்தால் திருவழிப்பாட்டில், குருத்துவத்தில் - துறவற வாழ்வில் - கிறீஸ்தவ வாழ்வில் ஏற்பட்டு வரும் அலங்கோலங்களும், நாசமும், அதனால் ஏற்படும் ஆன்ம இழப்புகளும் 350 ஆண்டுகளுக்கு முன்பே இக்கன்னிகைக்கு அறிவிக்கப்பட்டன!! அவைகளுக்காக தன்னையே பலியாக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டாள். விசுவாசிகள் இந்த தீர்க்கத்தரி சனங்களை அறிந்து கொள்வது அவர்களுக்கு நன்மை பயக்கும். விசுவாசத்தில் இன்னும் உறுதிப்பட்டு திருச்சபைக்காக ஜெபிக்கத் தூண்டும் - ஆசிரியர்.
Tamil Catholic Bolg
A blog for all Tamil Catholics. all articles you can read it here in tamil.
Tuesday, August 26, 2025
நிறைவேறிவரும் தீர்க்கத்தரிசனங்கள் - Introduction
Monday, July 7, 2025
அர்ச் சிலுவை அருளப்பரின் தியானம் பாகம் -8 - கடவுள் இரக்கமுள்ளவர், இருந்தும் பலர் ஒவ்வொரு நாளும் இழக்கப்படுகிறார்கள்
பாகம் -8 - கடவுள் இரக்கமுள்ளவர், இருந்தும் பலர் ஒவ்வொரு நாளும் இழக்கப்படுகிறார்கள்.
கடவுள் இரக்கமுள்ளவராக இருக்கிறாரே என்று பாவி சொல்கிறான். நான் அவனுக்குப் பதில் சொல்கிறேன்: அதை யார் மறுக்கிறார்கள்? உண்மைதான். கடவுளின் இரக்கம் அளவற்றதுதான். ஆயினும் ஒவ்வொரு நாளும் பலர் இழக்கப்படுகிறார்களே! "(மனஸ்தாபத்தால்) நொறுங்கிய இருதயமுள்ளவர்களைக் குணமாக்க அவர் என்னை அனுப்பினார்" (இசை.61:1), நல்ல மனமுள்ளவர்களைக் கடவுள் குணப்படுத்துகிறார். அவர் பாவத்தை மன்னிக்கிறார்; ஆனால் பாவத்தில் பிடிவாதமாக நிலைத்திருப்பவனை அவர் மன்னிக்க இயலாது.
"நான் இன்னும் இளைஞன்தான்" என்று பாவி பதில் கூறலாம். உண்மை! நீ இளைஞன்தான்; ஆனால் கடவுள் வருடங்களையல்ல. பாவங்களையே கணக்கிடுகிறார். இது அனைவருக்கும் ஒரே விதமாக இருப்பதில்லை. ஒருவனுக்குக் கடவுள் நூறு பாவங்களையும், மற்றொருவனுக்கு ஆயிரம் பாவங்களையும் மன்னிக்கிறார். இன்னொருவனையோ, அவன் இரண்டாவது பாவம் கட்டிக் கொண்ட உடனேயே நரகத்தில் தள்ளுகிறார். எத்தனை பேரை அவர்களுடைய முதல் பாவத்திலேயே அவர் அங்கே அனுப்பியிருக்கிறார்! ஐந்து வயதுக் குழந்தை ஒன்று ஒரு தேவதூஷணம் கூறியதற்காக, அடுத்த கணம் நரகத்தில் தள்ளப்பட்டதாக அர்ச். கிரகோரியார் கூறுகிறார்!
பன்னிரண்டு வயதுச் சிறுமி ஒருத்தி தனது முதல்பாவத்திற்காக நரகத்திற்குத் தீர்ப்பிடப்பட்டதாக திவ்விய கன்னிகை ஃப்ளாரன்ஸின் பெனடிக்டா என்னும் தேவ பணிப்பெண்ணுக்கு வெளிப்படுத்தினார்கள். எட்டு வயதேயான மற்றொரு சிறுவன் தன முதல் பாவம் செய்தவுடனே இறந்து, தன் ஆன்மாவை இழந்து போனான். அத்திமரத்தில் தாம் கனி எதையும் காணாத முதல் தடவையே நமதாண்டவர் அதைச் சபித்தார் என்றும், அது பட்டுப் போயிற்றென்றும் அர்ச். மத்தேயு சுவிசேஷத்தில் நாம் வாசிக்கிறோம்: "இனி ஒருக்காலும் உன்னிடத்தில் காய் காய்க்காமல் போகட்டும்" (மத். 21:19).
மற்றொரு முறை சர்வேசுரன்: “தமாஸ்குவின் மூன்று பாதகங்களை மன்னிப்போம், நான்காவதிலோ அதை நாம் மனந்திருப்ப மாட்டோம்" என்றார் (ஆமோஸ்.1:3). மித மிஞ்சின நம்பிக்கையுள்ள மனிதன் யாராவது கடவுளிடம் அவர் என் மூன்று பாவங்களை மன்னித்தாலும், நான்காவதை மன்னிக்க மாட்டார் என்று கேட்கலாம். அதில், நாம் கடவுளின் தெய்வீகத் தீர்ப்புகளை ஆராதித்து, அப்போஸ்தலரோடு சேர்ந்து: "ஆ, தெய்வ ஞானம், அறிவு இவைகளின் திரவிய பொக்கிஷம் எவ்வளவோ ஆழமானது! அவருடைய நியாயத் தீர்ப்புகள் எவ்வளவோ புத்திக் கெட்டாதவைகளுமாய், அவருடைய வழிகள் எவ்வளவோ ஆராய்ந் தறியக் கூடாதவைகளுமாயிருக்கின்றன" (உரோ.11:33) என்று சொல்ல வேண்டும். "தாம் யாரை மன்னிக்கிறார் என்றும், யாரை மன்னிப்பதில்லை என்றும் அவர் நன்றாக அறிந்திருக்கிறார்; அவர் யாருக்காவது இரக்கம் காட்டுகிறார் என்றால், அதை அவர் இலவசமாகவே தருகிறார்; அவர் அதை மறுக்கும்போதோ, நீதியுடன் அதைத் தர மறுக்கிறார்" என்று அர்ச். அகுஸ்தினார் கூறுகிறார்.
பிடிவாதமுள்ள பாவி, “ஆனால் நான் மிக அடிக்கடி கடவுளை நோகச் செய்திருக்கிறேன். அவரும் என்னை மன்னித்திருக்கிறாரே: ஆகவே, இந்த இன்னொரு பாவத்தையும் அவர் மன்னிப்பார் என்று நான் நம்புகிறேன்" என்று பதில் சொல்வான். ஆனால் நான் சொல்கிறேன்: கடவுள் இதுவரை உன்னைத் தண்டிக்கவில்லை என்பதால், இனியும் அது அப்படித்தான் இருக்குமா? (பாவத்தின்) அளவு நிரம்பி விடும், அப்போது தண்டனை வரும்.
சம்சோன் தாலிலாவோடு தன் அசுத்த நடத்தையைத் தொடர்ந்து கொண்டே. முன்பு போல பிலிஸ்தியர்களின் கரங்களிலிருந்து தான் தப்பி விட முடியும் என்று நம்பினான்: "முன்பு போல் என் சங்கிலிகளை உடைத்து நான் புறப்பட்டுப் போவேன்" (நியா.16:20). ஆனால் அந்தக் கடைசி முறை அவன் பிடிபட்டான். இறுதியில் தன் உயிரையும் இழந்தான். "பாவம் செய்தேன். அதனால் எனக்கு என்ன தீங்கு வந்தது? என்று சொல்லாதே. "நான் மிக அநேகப் பாவங்களைக் கட்டிக் கொண்டேன், கடவுள் என்னை ஒருபோதும் தண்டிக்க வில்லை என்று சொல்லாதே" என்கிறார் ஆண்டவர்: "ஏனெனில் உன்னதக் கடவுள் பொறுமையாயிருந்தபின் தண்டிப்பார்" (சீராக்)5:4). அதாவது, காலம் வரும், அப்போது அவர் அனைத்திற்கும் சன்மானமோ, தண்டனையோ தருவார். அவரது இரக்கம் எவ்வளவு பெரிதாயிருந்ததோ, அந்த அளவுக்கு தண்டனையும் பெரிதாயிருக்கும்.
மனஸ்தாப ஜெபம்
நான் சோதிக்கப்படும்போது, ஓ இரக்கமுள்ள தேவனே, நான் எப்போதும் உடனே ஓடி வந்து உம்மிடம் தஞ்சம் புகுவேன். இதுவரை என் வாக்குறுதிகளிலும், என் தீர்மானங்களிலும் நான் நம்பிக்கை வைத்திருந்தேன், என் சோதனைகளில் உம்மிடம் என்னை ஒப்புவிப்பதில் நான் அசட்டையாயிருந்தேன். இதுவே என் அழிவாக இருந்து வந்திருக்கிறது. இல்லை; இந்நாள் முதல் நீரே என் நம்பிக்கையாகவும் பலமாகவும் இருப்பீர். இவ்வாறு எல்லாவற்றையும் செய்து முடிக்க வல்லவனாக நான் இருப்பேன்.
ஆகையால், ஓ என் சேசுவே, எப்போதும் உம்மிடம் என்னைக் கையளித்து, என் எல்லாத் தேவைகளிலும் உமது உதவியை மன்றாடும்படியாக, உமது பேறுபலன்களின் வழியாக, எனக்கு அருள் தாரும். ஓ என் இராஜரீக நன்மைத்தனமே. நேசிக்கப்படத் தக்க அனைத்திற்கும் மேலாக நேசிக்கப்படத் தக்கவரே, நம்மை நான் நேசிக்கிறேன், உம்மை மாத்திரமே நான் நேசிப்பேன் ஆயினும் நீர் எனக்கு உதவி செய்ய வேண்டும்.
ஓ மரியாயே, என் மாதாவே. நீரும் உமது மன்றாட்டால் எனக்கு உதவி செய்ய வேண்டும்; உமது பாதுகாவலின் மேற்போர்வைக்குள் என்னை மறைத்து வைத்துக் கொளளும், நான் சோதிக்கப்படும்போதெல்லாம் உம்மைக் கூவியழைக்க எனக்கு வரமருளும்; உமது திருப்பெயர் எனக்குக் காவல் அரணாயிருக்கும்.
நீதியின் சூரியனே அர்ச் சூசையப்பரே எங்களுக்காக உமது திருக் குமாரனை வேண்டிக் கொள்ளும்
ஆமென்
அர்ச் சிலுவை அருளப்பரின் தியானம் நமது ஆத்தும இரட்சண்ய வாழ்வு எப்படி இருக்க வேண்டும் ? பாகம் -7
"கெட்டவர்களுக்கு சமாதானமில்லை." 2
கடவுள் பாவிகளைப் புயல்வீசும் சுடலுக்கு ஒப்பிடுகிறார். "துன்மார்க்கரோ, அடங்க அறியாது கொதித்தெழும் கடலைப் போல்... இருக்கிறார்கள்" (இசை.57:20). நான் உன்னிடம் கேட்கிறேன்: யாராவது ஒருவனை நாடக அரங்குக்கு, அல்லது நடன அரங்குக்கு, அல்லது ஒரு விருந்துக்கு அழைத்துச் சென்று, அங்கே அவனைத் தலைகீழாகக் கட்டித் தொங்க விட்டால், அங்கே நடைபெறும் கேளிக்கைகளை அவனால் அனுபவிக்க முடியுமா?
பாவியின் நிலையும் அதுதான். உலக உல்லாசங்களுக்கு நடுவில், ஆனால் கடவுள் இன்றி இருக்கிற அவனது ஆத்துமம் தலைகீழாகத் திருப்பப்பட்டது போல் இருக்கிறது. அவன் உண்ணலாம், குடிக்கலாம். நடனமாடலாம்; ஆடம்பரமான உடைகள் அணிந்து, பிறரால் மதித்துப் போற்றப்படலாம். கௌரவிக்கப்படலாம். அல்லது பெரும் உலக செல்வங்கள் அவனுக்குச் சொந்தமாகலாம். ஆனால் அவன் சமாதானத்தைக் கொண்டிருக்க மாட்டான்: கெட்டவர்களுக்கு சமாதானமில்லை. சமாதானம் கடவுளிடமிருந்து மட்டுமே வருகிறது; கடவுள் தம் எதிரிகளுக்கு அல்ல, தம் நண்பர்களுக்கே அதைக் கொடுக்கிறார்.
இவ்வுலக இன்பங்கள் வறண்டு போகின்றன என்று அர்ச். வின்சென்ட் ஃபெரர் கூறுகிறார்; அவை இருதயத்திற்குள் நுழைவதில்லை: "எங்கே தாகம் இருக்கிறதோ, அங்கே ஊடுருவிச் செல்லாத நீர்த்தாரைகள் அவை." பாவி அழகிய பின்னல் வேலை செய்த விலையேறப்பெற்ற உடைகளை அணியலாம், அல்லது தன் விரலில் அற்புதமான வைர மோதிரம் அணியலாம்: தன் விருப்பப்படி அருமையான அறுசுவை விருந்தாடலாம்; ஆனால் அவனது பரிதாபமான இருதயம் முட்களும். கசப்பும் நிரம்பியதாகவே நிலைத்திருக்கும்;
ஆகவே செல்வங்களும், இன்பங்களும், கேளிக்கைகளும் அவனைச் சூழ்ந்திருந்தாலும், எப்போதும் அமைதியற்றவனாகவும், சிறு பிரச்சினைக்கும் வெறி பிடித்த நாயைப் போல கோப வெறி கொள்பவனாகவுமே நீ அவனைக் காண்பாய். கடவுளை நேசிப்பவனோ, தனக்கு விரோதமான காரியங்கள் நிகழும்போது, தேவ சித்தத்திடம் தன்னைக் கையளித்து, சமாதானத்தைக் கண்டடைகிறான்.
ஆனால் தேவ சித்தத்திற்கு விரோதியாக இருப்பவனால் இதைச் செய்ய முடியாது. ஆகவே தன்னை அமைதிப்படுத்தும் வழியை அவன் அறியாதிருப்பான். அந்த மகிழ்ச்சியற்ற மனிதன் பசாசுக்கு ஊழியம் செய்து, மனவேதனையையும், கசப்பையும் மட்டுமே அந்தக் கொடுங்கோலனிடமிருந்து கூலியாகப் பெறுகிறான்.
ஆ, தேவ வார்த்தை ஒருபோதும் தவற முடியாததாக இருக்கிறது. "உனக்கு அனைத்தும் மிகுதியாகி, மன மகிழ்ச்சியுடனும், இருதயக் களிப் புடனும் நீ இருக்கையில், உன் தேவனாகிய கர்த்தருக்கு நீ ஊழியம் செய்யாமல் போனதால், பசி வேதனைப்பட்டு, தாக வேதனைப்பட்டு, நிர்வாணம் முதலிய சகல குறைவும், வெறுமையும் பட்டு, கர்த்தர் உனக்கு எதிராக அனுப்பும் சத்துருக்களுக்கு ஊழியம் செய்வாய்" (உபா.28:47,48) என்று அது கூறுகிறது. பழிவாங்கத் துடிக்கும் மனிதன், தன்னையே பழிதீர்த்துக் கொள்ளும்போதும், பரிசுத்த கற்பில்லாத மனிதன், தான் இச்சித்துத் தேடியதை அடைந்த பின், பேராசையுள்ளவன் தான் நாடியதைப் பெற்றுக் கொண்டபின், எந்தத் துன்பத்தைத்தான் அனுபவிக்க மாட்டான்!
ஓ எத்தனை பேர்! அவர்கள் தங்களை அழித்துக் கொள்ளும் விதமாக இப்போது அனுபவிக்கும் துன்பங்களைக் கடவுளுக்காக மட்டும் அனுபவித்திருப்பார்கள் என்றால், உண்மையாகவே அவர்கள் பெரும் புனிதர்களாக ஆகியிருப்பார்கள்!
என் சர்வேசுரா, என் சர்வேசுரா, நான் ஏன் உம்மை இழந்து போனேன்; உம்மை விற்று எதை வாங்கிக் கொண்டேன்? நான் செய்துள்ள தீமையை இப்போது நான் அறிந்திருக்கிறேன்; இப்போது உமது அன்பை இழப்பதைக் காட்டிலும், அனைத்தையும், உயிரையும் கூட இழக்கவும் நான் தீர்மானம் செய்திருக்கிறேன்.
மனஸ்தாப ஜெபம்
நித்திய பிதாவே, சேசுகிறீஸ்துநாதரின் அன்பிற்காக, எனக்கு ஒளி தாரும்; நீர் எவ்வளவு மேலான நன்மைத்தனமாயிருக்கிறீர் என்றும், உமது வரப்பிரசாதத்தை நான் இழக்கும்படியாக, பசாசு எனக்குத் தரும் இன்பங்கள் எவ்வளவு அருவருப்புக்குரியவை என்றும் நான் அறிந்து கொள்ளச் செய்தருளும்; நான் உம்மை நேசிக்கிறேன்: ஆயினும் இன்னும் அதிகமாக உம்மை நேசிக்க நான் விரும்புகிறேன். நீரே என் ஒரே சிந்தனையும், ஒரே ஆசையும், ஒரே நேசமுமாக இருக்க எனக்கு வரமருளும். உமது திருக்குமாரனின் பேறுபலன்களின் வழியாக உமது நன்மைத்தனத்திலிருந்து நான் எல்லாவற்றையும் பெற்றுக்கொள்வேன் என்று நம்பியிருக்கிறேன்.
மரியாயே, என் மாதாவே, சேசுகிறீஸ்துநாதரின் மீது உமக்குள்ள அன்பைக் குறித்து, மரணம் வரையில் அவருக்கு ஊழியம் செய்யவும் அவரை நேசிக்கவும் எனக்கு வேண்டிய ஒளியையும், பலத்தையும் பெற்றுத் தர உம்மை மன்றாடுகிறேன்.
நீதியின் சூரியனே அர்ச் சூசையப்பரே எங்களுக்காக உமது திருக் குமாரனை வேண்டிக் கொள்ளும்
ஆமென்
அர்ச் சிலுவை அருளப்பரின் தியானம் நமது ஆத்தும இரட்சண்ய வாழ்வு எப்படி இருக்க வேண்டும் ? பாகம் -6
பாகம் -6 - "கெட்டவர்களுக்கு சமாதானமில்லை."
சமாதானம்! என்ன சமாதானம்? இல்லை
என்கிறார் சர்வேசுரன். "கெட்டவர்களுக்கு சமாதானமில்லை" (இசை.48:22). ஒருவனுக்கு
வலிமை மிக்க எதிரி ஒருவன் இருக்கிறான் என்றால், அவனால் சமாதானமாய் உண்ணவோ, உறங்கவோ
முடியாது; கடவுளையே தன் எதிரியாகக் கொண்டிருப்பவன் சமாதானத்தில் இளைப்பாற முடியுமா?!
இருதயத்தைத் திருப்திப்படுத்த இயலாத
இவ்வுலக இன்பங்களும், செல்வங்களும் வீண் என்று மட்டும் சாலமோன் சொல்லாமல், அவை ஆத்துமத்தை
சஞ்சலப்படுத்தும் வேதனைகள் என்றும் கூறுகிறார். “எல்லாம் விழலும், ஆத்துமத்திற்கு சஞ்சலமுமாயிருக்கின்றன"
(சங்கப். 1:14). பரிதாபத்திற்குரிய பாவிகள்! தங்கள் பாவங்களில் இன்பம் காணலாம் என்று
அவர்கள் எண்ணுகிறார்கள். ஆனால் கசப்பையும், மனவுறுத்தலையும் மட்டுமே அவர்கள் காண்கிறார்கள்:
"அவர்கள் வழிகளில் அழிவும் நிர்ப்பாக்கியமும் இருக்கின்றன. சமாதானத்தின் வழியை
அவர்கள் அறிந்ததில்லை" (சங்.13:3).
சமாதானம்! என்ன சமாதானம்! இல்லை என்கிறார் ஆண்டவர்:
“கெட்டவர்களுக்கு சமாதானமில்லை" (இசை.48:22). முதலாவதாக, பாவம் தன்னோடு தேவ பழிவாங்குதல்
பற்றிய கடும் அச்சத்தைக் கொண்டு வருகிறது. ஒருவனுக்கு வலிமை மிக்க எதிரி ஒருவன் இருக்கிறான்
என்றால், அவனால் சமாதானமாய் உண்ணவோ, உறங்கவோ முடியாது; கடவுளையே தன் எதிரியாகக் கொண்டிருப்பவன்
சமாதானத்தில் இளைப்பாற முடியுமா? "தீமை செய்பவர்களுக்கு அஞ்சுங்கள்" (பழமொழி.10:29).
ஒரு நில நடுக்கமோ, இடி முழக்கமோ உண்டானால், பாவத்தில்
வாழ்பவன் எப்படி நடுங்காமலிருப்பான்! அசையும் ஒவ்வொரு இலையும் கூட அவனை எச்சரிக்கிறது:
"பேரச்சத்தின் ஓசை எப்போதும் அவன் காதுகளில் இருக்கிறது" (யோபு.28:1). தன்னைத்
துரத்துபவனைக் காணாவிடினும், அவன் பறந்தோடுகிறான். "எவனும் துரத்தாமலே தீயவன்
பறந்தோடிப் போகிறான்" (பழ.28:1). அவனைத் துரத்துவது யார்? அவனுடைய சொந்தப் பாவமே.
காயின் தன் சகோதரனான ஆபேலைக் கொன்றபின்: "ஆகவே, என்னைக் காண்கிற எவனும் என்னைக்
கொல்வானே!" என்றான் (ஆதி.4:4). எவனும் அவனைக் காயப்படுத்த மாட்டான் என்று ஆண்டவர்
அவனுக்கு உறுதி தந்த போதிலும் -இல்லை, அது அப்படி இருக்காது வேதாகமம் கூறுவது போல,
காயின் எப்போதும் ஒடிக்கொண்டேயிருக்கும் ஓர் அகதியாக இருந்தான்: "காயின் பூமியின்மீது
பரதேசியாய் சஞ்சரித்தான்" (ஆதி.4:16). காயினைத் துன்பப்படுத்தியது அவனுடைய சொந்தப்
பாவங்களே அல்லாமல் வேறு என்ன?
மேலும், பாவம் தன்னோடு மனவுறுத்தலையும்--இடை
விடாமல் அரித்துத் தின்னும் அந்தக் கொடூரமான புழுவையும்--கொண்டு வருகிறது. ஈனப் பாவி,
நாடகத்திற்கும். நடனங்களுக்கும். விருந்துகளுக்கும் போகிறான். ; அவனது மனசாட்சி அவனிடம்:
“நீ கடவுளின் பகைவனாக இருக்கிறாய்; நீ இறக்க நேர்ந்தால், எங்கே செல்வாய்?" என்று
கேட்கிறது. மனவுறுத்தல் இவ்வாழ்விலும் கூட எவ்வளவு பெரிய வாதை என்றால், அதிலிருந்து
தப்பிப்பதற்காகச் சிலர் தற்கொலை செய்து விடுகிறார்கள். இவர்களில் ஒருவன் அவநம்பிக்கையின்
காரணமாக நான்று கொண்ட செத்த யூதாஸ் ஆவான்.
மற்றொருவனைப் பற்றிப் பின்வருமாறு
விவரிக்கப் படுகிறது: அவன் ஒரு குழந்தையைக் கொலை செய்தபின், மன உறுத்தலிலிருந்து தப்பிப்பதற்காக
ஒரு துறவி ஆனான். ஆனால் துறவறத்திலும் கூட சமாதானத்தைக் கண்டடைய முடியாமல். அவன் ஒரு
நீதிபதியிடம் போய், தன் குற்றத்தை அவரிடம் ஒத்துக் கொண்டு, மரண தண்டனைக்குத் தன்னை
உட்படுத்திக் கொண்டான்.
தியானச் சிந்தனை
ஓ வீணாக்கப்பட்டு விட்ட என் வாழ்வே!
ஓ என் தேவனே, உம்மை நோகச் செய்தபின் நான் பட்ட வேதனைகளை உம்மை மகிழ்விக்கும் கருத்தோடு
நான் அனுபவித்திருந்தேன் என்றால், மோட்சத்திற்காக எவ்வளவு அதிகமான பேறுபலனை இப்போது
நான் பெற்றிருப்பேன்!
ஆ, என் ஆண்டவரே, எதற்காக நான் உம்மை
விட்டுப் பிரிந்து, உமது வரப்பிரசாதத்தை இழந்து போனேன்? ஒரு குறுகிய கால, விஷமேறிய
இன்பங்களுக்காக! அவையோ எனக்குச் சொந்தமான அடுத்த கணமே மாயமாக மறைந்து விட்டன. ஆனதால்
என் இருதயத்தை அவை முட்களும், சுசப்பும் நிறைந்ததாக விட்டுச் சென்றன.
ஆ. என் பாவங்களே, நான் ஆயிரம் தடவை
உங்களை வெறுத்துச் சபிக்கிறேன். என் சர்வேசுரா, எவ்வளவோ பொறுமையோடு என்னை சகித்துக்
கொண்ட உமது இரக்கத்தை நான் வாழ்த்திப் போற்றுகிறேன். என் சிருஷ்டிகரும் மீட்பருமானவரே,
எனக்காக உம் உயிரைக் கையளித்தவரே, நான் உம்மை நேசிக்கிறேன்; உம்மை நான் நேசிப்பதால்,
உம்மை நோகச் செய்ததற்காக என் முழு இருதயத்தோடும் மனஸ்தாபப்படுகிறேன்
ஆமென்
Saturday, July 5, 2025
அர்ச் சிலுவை அருளப்பரின் தியானம் நமது ஆத்தும இரட்சண்ய வாழ்வு எப்படி இருக்க வேண்டும் ? பாகம் -5
அர்ச் சிலுவை அருளப்பரின் தியானம்
நமது ஆத்தும இரட்சண்ய வாழ்வு எப்படி இருக்க வேண்டும் ?
பாகம் -5
ஏதாவது ஓர் இன்பத்தின் நிமித்தம் பாவியானவன் கடவுளை நோகச் செய்யும்போது. அந்த இன்பமே அவனது தெய்வமாகிவிடுகிறது. ஏனெனில் அதையே அவன் தனது இறுதி நோக்க மாக்கிக் கொள்கிறான்.
“ஒவ்வொருவனும் ஆசிக்கும் காரியத்தையே அவன் வழிபடுவான் என்றால், அது அவனுக்கு ஒரு தெய்வமாக இருக்கிறது. இருதயத்திலுள்ள ஒரு துர்க்குணம் பீடத்தின் மீதுள்ள விக்கிரகமாக இருக்கிறது" என்று அர்ச். ஜெரோம் கூறுகிறார். "இன்பங்களை நீ நேசிக்கிறாய் என்றால், அந்த இன்பங்கள் உன் தெய்வமாக இருக்கின்றன" என்று அர்ச். தாமஸ் அக்குயினாஸ் கூறுகிறார்.
அர்ச். சிப்ரியன் தம் பங்கிற்கு, "கடவுளுக்குப் பதிலாக மனிதன் வேறு எதைத் தேர்ந்து கொண்டாலும், அவன் அதைத் தனது தெய்வமாக்குகிறான்" என்கிறார். ஜெரோபோவாம் கடவுளுக்கு எதிராகக் கலகம் செய்தபோது, மக்களைத் தன்னோடு விக்கிரக வழிபாட்டிற்குள் இழுத்துக் கொள்ள அவன் முயன்றான். எனவே அவன் தன் விக்கிரகங்களை அவர்களுக்குக் காட்டி, "ஓ இஸ்ராயேலே. இவர்களே உன் தேவர்கள்" என்றான் (3 அரசர்.12:28).
இவ்வாறே பசாசும் பாவிக்கு ஏதாவது ஓர் உலக இன்பத்தைக் காட்டி, “உனக்கும் கடவுளுக்கும் என்ன இருக்கிறது? இந்த இன்பத்தில், இந்த ஆசாபாசத்தில் உன் தெய்வத்தைப் பார்; இதை எடுத்துக் கொள், கடவுளை விட்டுவிடு" என்கிறது. பாவி இதற்கு சம்மதிக்கும்போது, அந்த இன்பத்தை அவன் தன் இருதயத்தில் தெய்வமாக வைத்து ஆராதிக்கிறான்: "இருதயத்தில் உள்ள ஒரு துர்க்குணம், பீடத்தின் மீதுள்ள ஒரு விக்கிரகமாக இருக்கிறது."
பாவியானவன் கடவுளை அவசங்கை செய்கிறான் என்றாலும், குறைந்தபட்சம் அவரது சமூகத்தில் அவன் அப்படிச் செய்யாமல் இருப்பானா? ஆ அவன் அவரது திருமுகத்திற்கு முன்பாகவே அவரை அவமானப்படுத்துகிறான். ஏனெனில் கடவுள் எங்கும் வியாபித்திருக்கிறார். "நாம் பரலோகத்தையும், பூலோகத்தையும் நிரப்புகிறோம்" (எரே.23:24). இதைப் பாவியும் அறிந்திருக்கிறான். இருந்தாலும் கடவுளின் கண்களுக்கு முன்பாகவே அவருக்குக் கோபமூட்ட அவன் தயங்குவதில்லை. "அவர்கள் நமக்குக் கோபமூட்டும் காரியத்தை அவர்கள் நம் கண்களுக்கு முன்பாகவே செய்கிறார்கள்"(இசை. 65:3).
இதோ, என் தேவனே, நான் நம்பியுள்ளது போல, நான் இப்போது உம்மிடம் திரும்பி வருகிறேன்; நீர் ஏற்கெனவே என்னை உம் குழந்தையாக ஏற்று என்னை அரவணைக்கிறீர்.
ஓ அளவற்ற நன்மைத்தனமே, நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஆனால் இப்போது எனக்கு உதவி புரியும். என்னிடமிருந்து உம்மை மீண்டும் தள்ளிவிட ஒருபோதும் அனுமதியாதேயும். நரகம் என்னைச் சோதிப்பதை நிறுத்தாது; ஆனால் நீர் நரகத்தை விட அதிக வல்லமை யுள்ளவராக இருக்கிறீர். நான் எப்போதும் உமக்கு என்னை ஒப்புக் கொடுத்து வருவேன் என்றால், இனி ஒருபோதும் என்னை நான் உம்மிடமிருந்து விலக்கிக் கொள்ள மாட்டேன் என்பதை நான் அறிந்திருக்கிறேன்.
எனவே, நான் என்னை எப்போதும் உமது பாதுகாவலில் வைக்கும்படியாகவும், இப்போது நான் செய்வது போல, "ஆண்டவரே. எனக்கு ஒத்தாசை செய்யும்; எனக்கு ஒளி தாரும், எனக்கு பலம் தாரும், எனக்கு நிலைமை வரம் தாரும், எனக்குப் பரலோகத்தைத் தாரும். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, ஆன்மாக்கனின் உண்மையான பரலோகமாக இருக்கிற உமது தேவசிநேகத்தை எனக்குத் தந்தருளும்" என்று எப்போதும் உம்மிடம் நான் ஜெபிக்கும்படியாகவும், நீர் எனக்குத் தந்தருள வேண்டிய வரம் இதுவே.
ஓ அளவற்ற நன்மைத்தனமே, நான் உம்மை நேசிக்கிறேன். எப்போதும் உம்மை நேசிக்க ஆசையாயிருக்கிறேன். சேசுக்கிறீஸ்துநாதரின் அன்பிற்காக, என் மன்றாட்டைக் கேட்டருளும். மரியாயே, நீர் பாவிகளின் அடைக்கலமாக இருக்கிறீர்; உம் சர்வேசுரனை நேசிக்க ஆசிக்கும் பாவியாகிய எனக்கு உதவி செய்தருளும்.
பரிசுத்த மரியாயே, நீரே என் நம்பிக்கை என்பதால், என் மீது தயவாயிரும்.
அர்ச் சூசையப்பரே எங்களுக்காக உமது திருக் குமாரனை வேண்டிக் கொள்ளும்
ஆமென்
அர்ச் சிலுவை அருளப்பரின் தியானம் நமது ஆத்தும இரட்சண்ய வாழ்வு எப்படி இருக்க வேண்டும் ? பாகம் -4
அர்ச் சிலுவை அருளப்பரின் தியானம்
நமது ஆத்தும இரட்சண்ய வாழ்வு எப்படி இருக்க வேண்டும் ?
பாகம் -4
சர்வேசுரனுடைய மகா மேன்மையையும், மகத்துவத்தையும் தியானித்து, தாவீதரசர்: "ஆண்டவரே, உமக்கு நிகரானவர் யார்?" என்று கூக்குரலிட்டார்! ஆனால் சர்வேசுரனோ, பாவிகள் தமது நட்பை வெறுத்துத் தள்ளி, அதற்குப் பதிலாக ஒரு பரிதாபமான, அற்ப உலக சுகத்தைத் தேர்ந்து கொள்வதைக் கண்டு, "என்னை யாருக்கு ஒப்பாக்கினீர்கள். அல்லது என்னை யாருக்கு சமமாக்கினீர்கள்!" என்று கேட்கிறார். பாவியானவன் கடவுளின் நட்பை விடத் தன் ஆசாபாசமும், தனது வீண்பெருமையும். தனது உலக இன்பமும் தனக்கு அதிக மதிப்புள்ளவை என்று அறிக்கை யிடுகிறான். "அவர்கள் ஒரு கைப்பிடி வாற்கோதுமைக்காகவும், ஒரு துண்டு உரொட்டிக்காகவுமே. நம் மக்களினத்தின் நடுவே, நமக்கெதிராகப் பாவம் செய்தார்கள்" (எசேக்.13:19),
பாவி கடவுளை நிந்தித்து வெறுக்கிறான். "திருச்சட்டத்தை மீறியதால் கடவுளுக்கு அவசங்கை செய்தாய்" (உரோ.2:23). ஆம்; ஏனெனில் பாவி கடவுளின் வரப்பிரசாதத்தைப் புறக்கணிக்கிறான்.
ஓர் அவலமான இன்பத்திற்காக, அவரது நட்பைக் காலில் போட்டு மிதிக்கிறான். ஒரு மனிதன் ஒரு இராச்சியத்தை, அல்லது உலகம் முழுவதையுமே தனதாக்கிக் கொள்ளும்படி கடவுளின் நட்பை இழப்பான் என்றால், அவரது நட்பு உலகத்தை விட ஓராயிரம் உலகங்களை விட அதிக மதிப்புள்ளது என்பதால், அப்போதும் கூட அவன் ஒரு மிகப் பெரிய தவறு செய்பவனாகவே இருப்பான். ஆனால் நாம் எதன் நிமித்தமாகக் கடவுளை நோகச் செய்கிறோம்? "தீயவர்கள் எதற்காகக் கடவுளை நோகச் செய்தார்கள்?" (சங்.9:13). கொஞ்சம் மண்ணுக்காக, ஒரு கோபவெறிக்காக, ஓர் அசுத்த இன்பத்திற்காக, கொதித்து, ஆவியாகி மறைகிற ஒன்றுக்காக, ஓர் அற்பப் பிரியத்துக்காக: "அவர்கள் ஒரு கைப்பிடி வாற்கோதுமைக் காகவும், ஒரு உரொட்டித் துண்டுக்காகவும் என்னை மீறினார்கள்."
பாவத்திற்கு சம்மதிப்பதா, வேண்டாமா என்னும் குழப்பத்தில் பாவி தன் கரங்களில் தராசை எடுத்து, எது அதிக எடையுள்ளது - கடவுளின் வரப்பிரசாதமா. அல்லது அந்தக் கோபவெறியா. அல்லது அந்தத் திரவ ஆவியா, அந்த இன்பமா என்று எடைபோட்டுப் பார்க்கிறான். பிறகு, பாவத்திற்குச் சம்மதிக்கும்போது, தன்னைப் பொறுத்த வரை, தன் ஆசாபாசமும், தன் இன்பமும் கடவுளின் நட்பை விடத் தனக்கு அதிக மதிப்புள்ளது என்று அவன் அறிக்கையிடுகிறான்.
இதோ கடவுள் பாவியால் அவசங்கை செய்யப்படுகிறார்! சர்வேசுரனுடைய மகா மேன்மையையும், மகத்துவத்தையும் தியானித்து, தாவீதரசர்: "ஆண்டவரே, உமக்கு நிகரானவர் யார்?” என்று கூக்குரலிட்டார்! ஆனால் சர்வேசுரனோ, பாவிகள் தமது நட்பை வெறுத்துத் தள்ளி. அதற்குப் பதிலாக ஒரு பரிதாபமான, அற்ப உலக சுகத்தைத் தேர்ந்து கொள்வதைக் கண்டு, "என்னை யாருக்கு ஒப்பாக்கினீர்கள், அல்லது என்னை யாருக்கு சமமாக்கினீர்கள்!" (இசை.40:25) என்று கேட்கிறார். ஆகவே, உனக்கு என் வரப்பிரசாதத்தை விட, அந்த அசுத்த இன்பம் அதிக மதிப்புள்ளதாக இருந்திருக்கிறது என்கிறார் ஆண்டவர்: "நீ உன் முதுகுக்குப் பின்னால் என்னைத் தள்ளி விட்டாய்" (எசேக். 23:35). அந்தப் பாவத்தால் நீ ஒரு கையையோ, அல்லது பத்து இலட்சம் ரூபாயையோ, அல்லது அதற்கும் மிகக் குறைவான ஒரு தொகையையோ இழக்க வேண்டி வரும் என்றால், அந்தப் பாவத்தை நீ செய்யாமல் இருந்திருப்பாய். ஆகவே கடவுள் உன் கண்களில் எவ்வளவு இழிந்தவராகத் தோன்றுகிறார் என்றால், ஒரு கண நேர ஆசாபாசத்திற்காக, அல்லது ஒரு பரிதாபமான, மிக அற்பமான இன்பத்திற்காக உன்னால் நிந்தித்துத் தள்ளப்பட வேண்டியவராக அவர் கருதப்படுகிறார் என்று ஸால்வியன் என்பவர் கூறுகிறார்: "மற்ற எல்லாக் காரியங்களோடும் ஒப்பிடும்போது. கடவுள் மட்டுமே உன்னால் வெறுக்கத் தக்கவராக மதிக்கப் படுகிறார்."
தியானச் சிந்தனை
ஆகவே, என் தேவனை, நீர் அளவற்ற நன்மைத்தனமாக இருக்கிறீர்; ஆனால் நான் அனுபவித்த அடுத்த கணம் மறைந்து போய்விட்ட ஓர் அற்ப சுகத்துக்காக நான் உம்மைக் கைநெகிழ்ந்தேன். ஆனால் இப்படி என்னால் புறக்கணிக்கப்பட்ட போதிலும், நான் மன்னிப்பை ஆசிக்கிறேன் என்றால், என்னை மன்னிக்க இப்போது நீர் தயாராயிருக்கிறீர். நான் உம்மை நோகச் செய்ததற்காக மனஸ்தாபப்பட்டால், உமது வரப்பிரசாதத்தை மீண்டும் என்னில் ஸ்தாபிப்பதாக நீர் வாக்களிக்கிறீர். ஆம், என் ஆண்டவரே. இவ்வாறு உம்மை அவமானப்படுத்தியதற்காக, என் முழு இருதயத்தோடு நான் மனஸ்தாபப்படுகிறேன். எல்லாத் தீமைகளுக்கும் மேலாக என் பாவத்தை நான் அருவருத்துத் தள்ளுகிறேன்.
பரிசுத்த மரியாயே, நீரே என் நம்பிக்கை என்பதால், என் மீது தயவாயிரும்.
அர்ச் சூசையப்பரே எங்களுக்காக உமது திருக் குமாரனை வேண்டிக் கொள்ளும்
ஆமென்
அர்ச் சிலுவை அருளப்பரின் தியானம் நமது ஆத்தும இரட்சண்ய வாழ்வு எப்படி இருக்க வேண்டும் ? பாகம் -3
அர்ச் சிலுவை அருளப்பரின் தியானம்
நமது ஆத்தும இரட்சண்ய வாழ்வு எப்படி இருக்க வேண்டும் ?
பாகம் -3
எல்லா மனிதரும் இரட்சிக்கப்பட வேண்டுமென கடவுள் சித்தம் கொள்கிறார்.
நம் பரிசுத்த மீட்பர் தமது சொந்த திரு இரத்தத்தை விலையாகத் தந்து, நித்திய சாவினின்று நம்மை மீட்டுக் கொண்டார். தாம் இவ்வளவு பெரிய விலை கொடுக்கக் காரணமாயிருந்த நம் ஆன்மாக்கள் இழக்கப்படுவதைக் காண அவர் விரும்புவதில்லை. தங்களை நரகத்திற்குத் தீர்ப்பிடுமாறு, தங்கள் பாவங்களைக் கொண்டு அவரை நெருக்குகிற ஆன்மாக்களை அவர் காணும்போது, அவர்கள் மீதுள்ள தயவிரக்கத்தால் அவர் அழுதபடி, "இஸ்ராயேல் வம்சத்தாரே, நீங்கள் ஏன் சாகவேண்டும்?... மனந்திரும்புங்கள்.
அதனால் பிழைத்திருப்பீர்கள்” (எசேக.18:31) என்கிறார்.
என் குழந்தைகளே, உங்களை இரட்சிக்கும்படியாக நான் ஒரு சிலுவையின் மீது மரித்திருக்க, நீங்கள் ஏன் உங்களை அழித்துக் கொள்கிறீர்கள், ஏன் உங்களையே சாபத்துக்கு உள்ளாக்கிக் கொள் கிறீர்கள்? மனந்திரும்பி தவம் செய்தபடி
என்னிடம் திரும்பி வாருங்கள். அப்போது, நீங்கள் இழந்துபோன தேவ உயிரை நான் உங்களில் மீண்டும் புதுப்பிப்பேன்.
கடவுள் எல்லா மனிதர்களின் இரட்சணியத்தையும் சித்தங் கொள்கிறார் என்று அப்போஸ்தலரான அர்ச். சின்னப்பர் கற்பிக்கிறார்: “சகல மனிதர்களும் இரட்சிக்கப்பட... அவர் சித்தமாயிருக்கிறார்" (1 திமோ.2:4). "அவர் (சர்வேசுரன்) ஒருவராவது கெட்டுப்போக விரும்பாமல், எல்லாரும் தவத்துக்குத் திரும்ப வேண்டுமென்று விரும்பி, உங்களைப் பற்றிப் பொறுமையோடு சகித்து வருகிறார்" என்று அர்ச். இராயப்பர் கூறுகிறார் (2 இரா.3:9). தேவ சுதன் இதற்காகவே பரலோகத்திலிருந்து இறங்கி வந்து, மனிதனாக அவதரித்து, கடும் உழைப்புகளிலும், துன்பங்களிலும் 33 ஆண்டுகளைச் செலவிட்டு, இறுதியாக, நம் இரட்சணியத்திற்காகத் தம் இரத்தத்தைச் சிந்தித் தம் உயிரைக் கையளித்தார். அப்படியிருக்க, நாமே நம் இரட்சணியத்தை வேண்டாமென்று தள்ளி விடலாமா?
நீரோ, என் இரட்சகரே, தேவரீர் என் இரட்சணியத்தை சம்பாதிப்பதில் உம் வாழ்நாளெல்லாம் செலவழித்தீர். என் வாழ்வில் இவ்வளவு அதிக ஆண்டுகளை நான் எதிலே செலவழித்திருக்கிறேன்? என்னிடமிருந்து என்ன பலனை நீர் அறுவடை செய்திருக்கிறீர்? வெட்டுண்டு, நரகத்தில் போடப்பட மட்டுமே நான் தகுதி பெற்றிருக்கிறேன். ஆனால் நீரே பாவியின் சாவை விரும்பாமல், அவன் மனந்திரும்பி, பிழைத்திருக்க வேண்டுமென்று விரும்புகிறீர் (எசேக்.33:11). ஆம், என் தேவனே, நான் எல்லாவற்றையும் விட்டு விட்டு, உம்மிடம் திரும்பி வருகிறேன். நான் உம்மை நேசிக்கிறேன், உம்மை நான் நேசிப்பதால், உம்மை மனநோகச் செய்ததற்காக நான் மனஸ்தாபப்படுகிறேன். என்னை ஏற்றுக்கொள்ளும், இனி நான் உம்மைக் கைவிட்டு விலக என்னை அனுமதியாதிரும்.
தங்கள் நித்திய இரட்சணியத்தை உறுதிப்படுத்திக் கொள்ள, புனிதர்கள் என்னதான் செய்யாதிருந்தார்கள்! எத்தனை பிரபுக்களும், அரசர்களும் தங்கள் இராச்சியங்களையும், நிலச் சொத்துக்களையும் துறந்து, அடைபட்ட மடங்களுக்குள் தங்களை வைத்து அடைத்துக் கொண்டார்கள்! எத்தனை இளவயதினர் தங்கள் நாட்டையும். நண்பர்களையும் விட்டுப் பிரிந்து குகைகளிலும், வனாந்தரங்களிலும் தங்கி வசித்தார்கள்! மேலும் எத்தனை வேதசாட்சிகள் மிகக் கொடூரமான வாதைகளுக்கு உட்பட்டுத் தங்கள் உயிரைக் கையளித்தார்கள்! இவற்றையெல்லாம் அவர்கள் ஏன் செய்தார்கள்?-தங்கள் ஆன்மாக்களை இரட்சித்துக் கொள்வதற்காக. நாம் என்ன செய்திருக்கிறோம்?
மரணம் அண்மையில் உள்ளது எனினும், அதைப் பற்றி நினைக்காதிருக்கிற எனக்கு ஐயோ கேடு! இல்லை, என் தேவனே, இனியும் உம்மிடமிருந்து நான் தொலைவாக வாழ மாட்டேன். நான் ஏன் தாமதிக்கிறேன்? நான் இப்போது இருக்கும் பரிதாபத்திற்குரிய நிலையில் மரணம் என் மீது வெற்றி கொள்வதற்காகவா? இல்லை, என் சர்வேசுரா, சாவுக்குத் தயாரிக்க தேவரீர் எனக்கு உதவி செய்தருளும்.
தியானச் சிந்தனை
ஒ தேவனே, நான் என் ஆத்துமத்தை இரட்சித்துக்கொள்வதில் எனக்கு உதவும்படியாக, என் இரட்சகர் எவ்வளவு அதிகமான வரப் பிரசாதங்களை என்மீது பொழிந்தருளினார்! மெய்யான திருச்சபையின் உதரத்தில் நான் பிறக்கச் செய்தார்; பல முறை என் மீறுதல்களை அவர் மன்னித்தார்; பிரசங்கங்களிலும், ஜெபங்களிலும், தியானங்களிலும், திவ்ய நன்மைகளிலும், ஞானப் பயிற்சிகளும் எவ்வளவோ அதிகமான ஒளிகளை எனக்குத் தரத் தயை புரிந்திருக்கிறார்; அடிக்கடி தம் நேசத்திடம் வரும்படி அவர் என்னை அழைத்திருக்கிறார். ஒரே வார்த்தையில், மற்றவர்களுக்குத் தராத எத்துணை அதிகமான இரட்சணிய வழிகளை அவர் எனக்குத் தந்தருளியிருக்கிறார்!
இருந்தும், என் தேவனே, உலகத்திடமிருந்து என்னைப் பிரித்துக் கொண்டு. நான் என்னை முழுவதும் உமக்குத் தருவது எப்போது? என் சேசுவே, என்னைக் கண்ணோக்கும். இனி நான் உம்மை எதிர்த்து நிற்க மாட்டேன். உம்மை நேசிக்கும் கடமையை எனக்குத் தந்திருக்கிறீர். முழுவதும் உம்முடையவனாக இருக்க நான் ஆசிக்கிறேன்; என்னை ஏற்றுக்கொள்ளும், இது வரை உம்மை மிக அதிகமாக நிந்தித்துத் துன்புறுத்திய ஒரு பாவியின் அன்பைப் புறக்கணித்துத் தள்ளாதேயும். என் தேவனே, என் அன்பரே, என் சர்வமுமே, நான் உம்மை நேசிக்கிறேன்.
பரிசுத்த மரியாயே, நீரே என் நம்பிக்கை என்பதால், என் மீது தயவாயிரும்.
அர்ச் சூசையப்பரே எங்களுக்காக உமது திருக் குமாரனை வேண்டிக் கொள்ளும்
ஆமென்