Saturday, December 18, 2021

கிறீஸ்துமஸ் திருநாள் - சங். மூ.னி. நிக்கோலாஸ் சுவாமி.

 கிறீஸ்துமஸ் திருநாள்

சங். மூ.னி. நிக்கோலாஸ் சுவாமி.


""நீர் ஒரு குமாரனைப் பெறுவீர்; அவருக்கு சேசு என்னும் நாமம் சூட்டுவீர்'' (லூக்.1:31) என கன்னிமாமரியிடம்  சம்மனசு  அறிவித்தார்.  சேசு  என்றால் இரட்சகர் எனப் பொருள்.

""இன்று தாவீதின் நகரத்தில் கிறீஸ்துநாதராகிய  இரட்சகர்  உங்களுக்காகப்  பிறந்திருக்கிறார்''  என  இடையர்களுக்கு  ஒரு தேவதூதன் அறிவித்தார் (லூக்.2:11).

கீழ்த்திசை  சோதிட  சாஸ்திரிகளுக்குத்  தோன்றிய  நட்சத்திரம்  சேசு  அனைவருக்கும்  இரட்சகர்  எனக்  காட்டிற்று.  இந்த  இரட்சிப்பானது  மனித  சந்ததிக்கு  ஒரு  நல்ல  செய்தியாகும்;  இந்த  நல்ல  செய்தியோ  பெரும்  மகிழ்ச்சியின்  ஊற்று.  ""இதோ  எல்லா ஜனங்களுக்கும் மகா சந்தோ­த்தை வருவிக் கும்  சுபசெய்தியை  உங்களுக்கு  அறிவிக்கிறேன்'' என்று இடையர்களுக்குத் தேவ தூதன் அறிவித்தார்  (லூக்.2:10).

இடையர்கள் போய் சேசுவைக் கண்டார்கள். அவரை ஏற்றுக்கொண்டார்கள். அவர்களுக்கு பிரகாசமும் மகிழ்ச்சியும் கிடைத்தன. யார் யார் சேசுவை ஏற்றுக்கொள்கிறார்களோ, அவர்கள் ஒளியும் சந்தோ­மும் அடைவார்கள். பெத்லகேம் மக்களோ சேசுவை அலட்சியம் செய்து விட்டார்கள்.

கீழ்த்திசையிலிருந்து வந்த அறிஞர்கள் சேசுவை ஏற்றுக்கொண்டனர். அவர்களும் மகிழ்ச்சியும்  ஒளியும்  பெற்றனர்.  எருசலேம்  நகர்  குருக்களோ,  போய்  சேசுவைப்  பார்க்க  விரும்பவில்லை. சேசு தனக்குப் போட்டியாக வருவார் என அஞ்சி ஏரோது அவரைக் கொல்ல விரும்பினான்.

சாதாரண  மக்களும்,  அறிஞர்களும்,  ஏழைகளும்,  செல்வந்தரும்  சேசுவைப்  பார்க்கப்  போனார்கள்; தம்மை ஏற்றுக்கொள்ளும் அனைவரையும் சேசு நேசிக்கிறார்.  யூதர்களும் புற  ஜாதியாரும் சேசுவிடம் போனார்கள். சேசு அனைவருக்கும் இரட்சகர் கர்த்தர் பிறந்த திருநாளன்று குருக்கள் மூன்று பூசைகள் நிறைவேற்றுகின்றனர். 

முதற்பூசை சுவிசே­த்தில் சொல்லப்பட்டபடி குறிப்பிட்ட காலத்தில் சேசு பிறந்ததை நினைவூட்டுகிறது. 

இரண்டாவது பூசை, இடையர்கள் சேசுவை ஆராதித்ததையும், ஆத்துமங்களில் சேசு பிறப்பதை யும்  காட்டுகிறது.  

சேசு  கடவுளாகிய  மட்டும்  நித்தியத்திலிருந்தே  இருக்கிறார்  எனக்  காட்ட, ""ஆதியலே வார்த்தையானவர் இருந்தார்'' என்றும், சேசு மனிதனாகிய மட்டும் குறிப்பிட்ட ஒரு காலத்தில் பிறந்தார் என்று காட்ட, ""வார்த்தையானவர் மாமிசமானார்'' என்றும், சேசு ஞான விதமாய்  ஆத்துமங்களில்  பிறக்கிறார்  என்று  காட்ட,  ""யார்  யார்  அரை  ஏற்றுக்கொண்டார் களோ, அவர்கள் தேவ புத்திரராகும்படி அவர்களுக்கு வல்லமையைக் கொடுத்தார்'' என்றும் மூன்றாம் பூசையில் வாசிக்கிறோம். சேசு பிறந்த வரலாற்றையும், கர்த்தர் பிறந்த திருநாளுக்குரிய 

வரப்பிரசாதத்தில் நாம் வாழ வேண்டும் என்பதையும் மூன்று பூசைகளும் நமக்கு நினைவுபடுத்துகின்றன.  அந்த வரப்பிரசாதம் நாம் சிறுவர்களைப் போல மாசற்றவர்களாய் வாழ்வதே. 

""நீங்கள் சிறுவர்களைப் போல் ஆகாவிட்டால் பரலோக இராச்சியத்தில்  பிரவேசிக்க மாட்டீர்கள்.''

சேசு தம்மை சாஸ்திரிகளுக்குக் காண்பித்ததை ஜனவரி 6-ம் நாளன்று நாம் கொண்டாடுகிறோம்.  இந்த சாஸ்திரிகள்  புறஜாதியார் அனைவரையும்  குறிக்கிறார்கள்.  சகல ஜாதி ஜனங்களும்  இரட்சகரிடம் வருவார்கள்  என்பதை  இசையாஸ் தீர்க்கதரிசியும்  தாவீதரசரும் முன்னறிவித்திருக்கிறார்கள்.

அர்ச்.  பிரான்சிஸ்  அசிசியார்,  கர்த்தர்  பிறந்த  திருநாளுக்கு  விசே­  சிறப்புக்கொடுத்தார். முதற்குடிலை ஜோடிக்கத் தொடங்கியவர் அவர் என்று சொல்லலாம்.

கர்த்தர்  பிறந்த  திருநாளன்று  பிறருக்கு  நம்மால்  முடிந்ததை  நாம்  கொடுக்க  வேண்டும். பெற்றுக்கொள்வதை விடக் கொடுப்பதே சிறந்தது. பெற்றுக் கொள்வதற்கு ஒரு காலம் உண்டு, என்றாலும்  கர்த்தர்  பிறந்த  திருநாளை யொட்டி  நாம்  பிறருக்குக்  கொடுத்து  அவர்களை மகிழ்விக்க  வேண்டும்.  சேசு  தம்மை  இடையர்களுக்கும்,  அறிஞர்களுக்கும்  கொடுத்து அவர்களை மகிழ்வித்தார்.

நம்  இருதயங்கள்  உயிருள்ள  குடில்களாக  வேண்டும்;  அந்தக்  குடில்களில்  சேசுவை ஏற்றுக்கொள்ள  அவற்றைத்  தயாரிக்கும்படி  நல்ல  பாவசங்கீர்த்தனம்  செய்ய  வேண்டும். பாவமோ,  பாவத்தின்மேல்  பற்றுதலோ  நம்  இருதயத்தில்  இருக்கலாகாது.  அப்படியானால் திவ்ய நற்கருணை வழியாக நம் இருதயத்தில் நாம் ஏற்றுக்கொள்ளும் சேசு நமக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தருவார்.

No comments:

Post a Comment